விளையாட்டு துறைக்கு முழு நேர அமைச்சர் நியமனம் எப்போது?
விளையாட்டு துறைக்கு முழு நேர அமைச்சர் நியமனம் எப்போது?
விளையாட்டு துறைக்கு முழு நேர அமைச்சர் நியமனம் எப்போது?
ADDED : செப் 11, 2025 11:41 PM
கர்நாடக விளையாட்டு துறை அமைச்சராக இருந்தவர் நாகேந்திரா.இவர், பழங்குடியினர் நல அமைச்சராகவும் இருந்தார். இந்த துறைக்கு உட்பட்ட வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டால், கடந்த ஆண்டு ஜூன் 6ம் தேதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
நாகேந்திராவிடம் இருந்த விளையாட்டு, பழங்குடியினர் நலன் ஆகிய இரு துறைகளும், முதல்வர் சித்தராமையா வசம் சென்றது.நிதி, நிர்வாக சீர்திருத்தம் உள்ளிட்ட முக்கிய துறைகள், அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள் சித்தராமையா வசம் இருப்பதால், அவரால் அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
விளையாட்டு துறை தனது வசம் வந்த, 16 மாதங்களில் இதுவரை ஓரிரு முறை மட்டுமே, விளையாட்டு துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
கர்நாடக ஒலிம்பிக் சங்க தலைவராக உள்ள கோவிந்தராஜ், முதல்வரின் அரசியல் செயலராக இருந்தார். விளையாட்டு துறை விவகாரங்களையும் அவரை கவனித்தும் வந்தார்.
ஆர்.சி.பி., அணி ஐ.பி.எல்., போட்டியில் கோப்பை வென்றதை கொண்டாடிய போது, சின்னசாமி மைதானம் முன்பு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகியினர். அந்த நேரத்தில் விதான் சவுதா முன்பு நடந்த நிகழ்ச்சியை அவசர, அவசரமாக ஏற்பாடு செய்ததாக கோவிந்தராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்ததால், அவரை தனது அரசியல் செயலர் பதவியில் இருந்து முதல்வர் நீக்கினார். இதையடுத்து விளையாட்டு தொடர்பான விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கியுள்ளார் கோவிந்தராஜ்.
விளையாட்டு துறை என்பது மிகவும் முக்கியமானது. திறமையான வீரர்கள் சர்வதேச வகையில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் துறையாக உள்ளது.
தற்போது விளையாட்டு துறைக்கு முழு நேர அமைச்சர் இல்லாததால், அனைத்து விவகாரங்களையும் முதல்வரிடம் எப்படி கொண்டு செல்வது என்று அதிகாரிகள் யோசிக்கின்றனர். இது நிச்சயம் வீரர், வீராங்கனைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனை கருத்தில் கொண்டு முழு நேர விளையாட்டு அமைச்சரை நியமிக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அதிகாரிகள், விளையாட்டு வீரர்களின் எண்ணமாக உள்ளது.
-- நமது நிருபர் --