Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ தங்கவயலை வாழ வைக்கும் ரயில் பயணங்கள்

தங்கவயலை வாழ வைக்கும் ரயில் பயணங்கள்

தங்கவயலை வாழ வைக்கும் ரயில் பயணங்கள்

தங்கவயலை வாழ வைக்கும் ரயில் பயணங்கள்

ADDED : அக் 04, 2025 11:03 PM


Google News
Latest Tamil News
உலக அளவில் வளமான, சிறப்புமிக்க நகரமாக முத்திரை பதித்துள்ளது தங்கவயல். கர்நாடகாவில் தொழிலுக்காகவே உருவான 'முதல்' நகரமே இது தான். இங்கு மூன்று லட்சம் பேர் வாழ்கின்றனர். இத்தகைய தங்க நகரில் தொழில் வளம் குன்றியதால், பொருளாதார வளர்ச்சி 25 ஆண்டுகளாக சரிவை கண்டுள்ளது.

கல்வியை மட்டுமே ஆதாரமாக கொண்டுள்ளவர்கள் இங்கு அதிகம். 100 சதவீதம் எழுத்தறிவு உள்ள பெருமையும் இந்த நகருக்கு தான் உண்டு. 'லிட்டில் இங்கிலாந்து' என்றும் அழைக்கப்பட்ட பெருமைக்குரியது.

உழைப்பை மட்டுமே மூலதனமாக வைத்து தொழிலில் களம் கண்டவர்கள். தங்க நகர் மக்கள். தங்கச் சுரங்கத் தொழில் முடங்கிய பின், மாற்றுத் தொழிலுக்கு வழியற்ற நிலை ஏற்பட்டது. வாழ்வதற்காகவும், வருமானத்துக்காகவும் வேலை தேடல் இவர்களுக்கு காலத்தின் கட்டாயமானது.

சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட போது, 'உள்ளே சென்றால் பிணம், மேலே வந்தால் பணம்' என்ற பழமொழி, தங்கச் சுரங்கத் தொழிலாளர்களுக்காகவே உருவானது. இவர்கள், வியர்வை முத்துக்களை சிந்தியவர்கள். சுரங்கத்துக்குள் 6,000 தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி பலியான இடமும் இதுவே தான். உயிரை துச்சமாகக் கருதியவர்களின் குடும்பத்தினரே, ஆறாவது தலைமுறையாக தங்கவயலில் வாழ்கின்றனர்.

தலை கீழ் மாற்றம் தங்கச் சுரங்கம் மூடப்பட்ட பின், நிலைமை தலைகீழானது. இருந்தாலும் மனம் தளராத தங்கவயல் மக்கள், பெங்களூருக்கு படை எடுத்தனர். பெங்களூரு 100 கி.மீ., தொலைவில் உள்ளது. இதற்காக, ரயில் பயணம் பச்சைக்கொடி காண்பித்தது. காலையில் சூரிய உதயம் ஆகும் முன், தங்கவயல் இளைஞர்கள் ரயிலை பிடிப்பர். தினமும் 30,000 பேர் தினப் பயணியராக சென்று வருகின்றனர்.

ஐ.டி., கம்பெனிகள், நிதி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், பள்ளி, கல்லுாரிகள், ஹோட்டல்கள், கட்டட பணிகள், செக்யூரிட்டி, வாகனங்கள் ஓட்டுதல், சிறிய, பெரிய வியாபாரங்கள் என தங்க நகரினர் கால் வைக்காத இடங்களே இல்லை. இவர்களின் மொத்த வருமானம் தான் தங்கவயலின் நிதி ஆதாரமாக இருந்து வருகிறது.

ஒரு காலத்தில் சொர்ணா ரயில் மட்டுமே பெங்களூருக்கு சென்று வர போக்குவரத்துக்கு எளிதான வாகனமாக இருந்தது. ஆனால், தேவைக்கேற்ப ரயில்வே துறை வசதிகளை செய்துள்ளது. காலை 6:30 மணிக்கு தங்கவயல் மாரிகுப்பத்தில் இருந்து புறப்பட்டு பெங்களூருக்கு 10:00 மணிக்கு சென்றடையும்; மறுமார்க்கமாக மாலை 6:20 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு இரவு 9:15 மணிக்கு மாரிகுப்பம் வந்தடைந்தது.

வாழ்வாதாரம் தற்போது மாரிகுப்பத்தில் இருந்து காலை 4:25 மணி, 6:20, 8:20, 9:10, பகல் 1:50, 5:00, 7:00, 8:45 மணிக்கு ரயில்கள் புறப்பட்டு பெங்களூரு செல்கின்றன. மறு மார்க்கமாகவும் ரயில்கள் உள்ளன. இவை தவிர, பங்கார்பேட்டை சந்திப்பில் இருந்து பல அதிவிரைவு ரயில்களும் பெங்களூரு செல்கின்றன. இதனால், தங்கவயல் வருமானமே ரயில் பயணம் மூலம் தான். இதில் தான் தங்கவயலின் வாழ்வாதாரமே இருந்து வருகிறது.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us