Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/குழந்தைகளுடன் குதுாகலிக்க சக்ரேபைலு யானைகள் முகாம்

குழந்தைகளுடன் குதுாகலிக்க சக்ரேபைலு யானைகள் முகாம்

குழந்தைகளுடன் குதுாகலிக்க சக்ரேபைலு யானைகள் முகாம்

குழந்தைகளுடன் குதுாகலிக்க சக்ரேபைலு யானைகள் முகாம்

ADDED : டிச 04, 2025 05:40 AM


Google News
Latest Tamil News
யானைகள் என்றால், அனைவருக்கும் பிரியம். இவை, மனிதர்களுடன் நண்பர்களை போன்றிருக்கும். மிகவும் சாதுவான விலங்கு. யானைகளை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும்.

குட்டி யானைகளுடன் விளையாட வேண்டும், அவற்றின் குறும்புத்தனத்தை பார்க்க வேண்டும் என விரும்பினால், சக்ரேபைலு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வாருங்கள்.

கர்நாடகாவில் பல்வேறு யானைகள் முகாம்கள் உள்ளன. வனத்தில் இருந்து கிராமங்களில் நுழைந்து, அட்டகாசம் செய்யும் யானைகளை வனத்துறையினர் பிடித்து, முகாம்களுக்கு அழைத்து வந்து பழக்கப் படுத்துகின்றனர்.

மரக்கட்டைகள் சுமப்பது, புலி, சிறுத்தைகள், காட்டு யானைகளை பிடிக்கும் பணிகளுக்கு பயன் படுத்துகின்றனர்.

யானைகளை பழக்கும் முகாம்களில், சக்ரேபைலு முகாமும் ஒன்றாகும். இது, கர்நாடகாவின் இரண்டாவது மிகப்பெரிய யானைகள் முகாம். ஷிவமொக்கா தாலுகாவின், சக்லேபைலு கிராமத்தில் இந்த முகாம் உள்ளது. இங்கு யானைகள் சுதந்திரமாக, உற்சாகமாக வாழ்வதை காணலாம். சுற்றுலா பயணியரை ஈர்க்கும் இடங்களில், சக்ரேபைலு முகாமும் ஒன்றாகும்.

துங்கா ஆற்றங்கரையில் உள்ள முகாமில், ஏராளமான யானைகள் உள்ளன. ஊட்டச்சத்து குறைபாடுள்ள யானைகளுக்கு, இங்கு ஊட்டச்சத்தான தீவனம் அளிக்கப்படுகிறது.

வனத்துறை இந்த முகாமை நிர்வகிக்கிறது. நன்கு பயிற்சி பெற்ற பாகன்கள், யானைகளை பார்த்து கொள்கின்றனர்.

வனத்தில் உள்ள யானைகளின் அன்றாட வாழ்க்கையை, அருகில் இருந்து பார்க்கலாம்.

தினமும் யானைகளை குளிப்பாட்டிய பின், வனத்துக்குள் மேய்வதற்காக அழைத்து செல்லப்படுகின்றன. குட்டி யானைகளை கொஞ்சி மகிழலாம். விளையாடலாம். அழகான பசுமை நிறைந்த வனப்பகுதியில், சக்ரேபைலு முகாம் அமைந்துள்ளது.

இயற்கையை ரசிப்பதுடன், யானைகள், இவற்றை பராமரிக்கும் பாகன்களின் அன்றாட வாழ்க்கையை அருகில் இருந்து பார்க்கலாம். குழந்தைகள், நண்பர்களுடன் பொழுது போக்க அருமையான இடமாகும்.

சமீபத்தில் இங்கு படகு சவாரி ஆரம்பமாகியுள்ளது. துங்கா ஆற்றில் படகில் சுற்றி வந்து இயற்கை காட்சிகளை ரசிக்கலாம்.

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து 305 கி.மீ., மைசூரில் இருந்து 200 கி.மீ,. மைசூரில் இருந்து 250 கி.மீ., தொலைவில் ஷிவமொக்கா உள்ளது. ஷிவமொக்காவில் இருந்து, 14 கி.மீ., தொலைவில், ஷிவமொக்கா - தீர்த்தஹள்ளி சாலையில், சக்ரேபைலு யானைகள் முகாம் உள்ளது.

அனைத்து நகரங்களில் இருந்தும், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ்கள், வாடகை வாகன வசதியும் உள்ளது. விமானத்திலும் வரலாம். ஷிவமொக்காவில் விமான நிலையம் உள்ளது. ரயில், பஸ் அல்லது விமான நிலையத்தில் வந்திறங்கி, அங்கிருந்து வாடகை வாகனங்களில் யானைகள் முகாமுக்கு செல்லலாம்.

பார்வை நேரம் காலை 8:30 மணி முதல், மதியம் 1;00 மணி வரை டிக்கெட் கட்டணம் பெரியவர்களுக்கு 40 ரூபாய், சிறார்களுக்கு 20 ரூபாய், ஏழு வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு அனுமதி இலவசம். 10 நிமிடம் யானைகள் மீது சவாரி செய்ய பெரியவர்களுக்கு 75 ரூபாய், சிறார்களுக்கு 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. யானைகளை குளிப்பாட்ட விரும்பினால், சுற்றுலா பயணியர் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி, யானைகளை குளிக்க வைக்கலாம். அருகில் உள்ள தலங்கள்: பத்ரா வன விலங்குகள் சரணாலயம், சிவப்பா நாயக் பேலஸ் மியூசியம், காஜனுார் அணை, ஜோக் நீர் வீழ்ச்சி, மன்டேகத்தே பறவைகள் சரணாலயம்.



- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us