Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/தங்கப்பதக்கம் வழங்காத பல்கலைக்கு அபராதம்

தங்கப்பதக்கம் வழங்காத பல்கலைக்கு அபராதம்

தங்கப்பதக்கம் வழங்காத பல்கலைக்கு அபராதம்

தங்கப்பதக்கம் வழங்காத பல்கலைக்கு அபராதம்

ADDED : டிச 31, 2010 02:07 AM


Google News

லக்னோ : தகுதியுடைய மாணவிக்கு, தங்கப்பதக்கம் வழங்காத லக்னோ பல்கலைக்கழகத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த 1994ம் ஆண்டு லக்னோ பல்கலைக்கழகம் நடத்திய தேர்வில், அல்கா பர்கவா என்ற மாணவி முதுகலை உயிர் வேதியியல் துறையில் முதலாவதாக வந்தார். இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்படும் பட்டமளிப்பு விழாவில் அவருக்கு தங்கப்பதக்கம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அந்த ஆண்டுக்குரிய பட்டமளிப்பு விழாவை பல்கலைக்கழகம் நடத்தவில்லை. இதனால், மாணவி அல்கா பர்கவா தங்கப்பதக்கம் பெற முடியவில்லை.

இதுதொடர்பாக, லக்னோ பல்கலைகழக நிர்வாகத்திடம் மாணவி அல்கா பர்கவா முறையிட்டும் பலனில்லை. தவிர, பட்டப்படிப்பு சான்றிதழ்களை பெறுவதற்கும் நீண்ட தாமதம் ஏற்பட்டது. இதனால் பல இன்னல்களை சந்தித்த மாணவி அல்கா பர்கவா, இறுதியாக மாநில தகவல் ஆணையத்திடம் (எஸ்.ஐ.சி.,) முறையீடு செய்தார்.

இதுதொடர்பாக, விசாரணை நடத்திய தகவல் ஆணைய கமிஷனர் ஞானேந்திர சர்மா நேற்றுமுன்தினம் தீர்ப்பு வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது: பட்டமளிப்பு விழா நடத்தாதற்கு மாணவி அல்கா எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது. குறிப்பிட்ட ஆண்டில், சாதனை புரிந்ததற்கான அங்கீகாரம் நியாயமாக அவருக்கு கிடைத்திருக்க வேண்டும். எனவே, லக்னோ பல்கலைக்கழகத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த தொகையை பாதிக்கப்பட்ட மாணவி அல்காவுக்கு ஒரு மாதத்திற்குள் பல்கலைக்கழகம் நஷ்ட ஈடாக வழங்கவேண்டும். தவிர, பட்டமளிப்பு விழா நடக்காத ஆண்டில் பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவியர் பட்டியலை, பல்கலைக்கழகத்தின் இணையதள பக்கத்தில் உடனடியாக வெளியிட வேண்டும். இவ்வாறு ஞானேந்திர சர்மா கூறியுள்ளார்.

தகவல் ஆணையத்தின் உத்தரவின் நகல் ஒன்று, பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மாநில கவர்னருமான பி.எல்.ஜோஷிக்கும் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us