கமுதியில் மீண்டும் அரிவாள் கலாசாரம் : வேடிக்கை பார்க்கும் போலீசார்
கமுதியில் மீண்டும் அரிவாள் கலாசாரம் : வேடிக்கை பார்க்கும் போலீசார்
கமுதியில் மீண்டும் அரிவாள் கலாசாரம் : வேடிக்கை பார்க்கும் போலீசார்
கமுதி : கமுதியில் மீண்டும் தலைதூக்கும் அரிவாள் கலாசாரத்தை போலீசார் வேடிக்கை பார்த்து வருவதால், இவை தொடரும் நிலை உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இரு பிரிவினர் மோதல் சில ஆண்டுகளாக குறைந்துள்ளது. நேற்று முன்தினம் தமிழக முன்னனேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் வருகையின் போது ஏற்பட்ட மோதலால், கமுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் பரபரப்புக்கு உள்ளாகின. இருதரப்பினரிடையே மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த மோதல் சம்பவத்தில் போலீசார் மெத்தனம் நீடிக்கிறது. நேற்று போலீசாரின் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணி படுமோசமாக இருந்தது. இதன் வெளிப்பாடாக கமுதி அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த பரலோகநாதன்(19) என்பவரை வேப்பங்குளம் வயல்காட்டில் வழி மறித்த அடையாளம் தெரியாத கும்பல், சரமாரியாக வெட்டியது. கை, முகத்தில் பலத்த காயம் அடைந்தவரை, கமுதி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து, மதுரை அரசு மருத்துமனையில் அனுமதித்துள்ளனர்.
ஜான்பாண்டியன் வருகையின் போது ஏற்பட்ட மோதலே, இச்சம்பவத்துக்கு காரணமாக இருக்கும் என தெரிகிறது. போலீசார் மீது பயம் இல்லாமல், மீண்டும் அரிவாள் கலாசாரம் முளைத்துள்ளதால், மாவட்டத்தின் அமைதி நிலைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் அரிவாளுடன் வலம் வருவதும், போலீசார் அதை வேடிக்கை பார்ப்பதும்,இதனால் பஸ்கள் நிறுத்தப்படுவதும் , பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. நிலைமை மோசமாகும் முன், சரியான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு போலீசார் முன்வரவேண்டும்.


