
மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் இனிய குரலில் பாடி இறையருள் பெறுங்கள்.
திருப்பாவை
பாடல் - 18
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
பொருள்: மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! மணம் கமழும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது.
விளக்கம்: பெருமாள் கோயிலுக்குப் போனால், முதலில் தாயாரை சேவிக்க வேண்டும். வீட்டில் கூட அப்படித்தானே! அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் 'எதற்கடா அதெல்லாம்' என்று கண்களை உருட்டுவார். அதையே, அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்டால், அதே கோரிக்கை பத்தே நிமிடத்தில் நிறைவேறி விடும். இதுபோல் தான் நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால்...அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்கமாட்டான். அதையே தாயாரிடம் சொல்லி விட்டால் அவனால் தப்பவே முடியாது. நரசிம்மரின் கோபத்தைக் கூட அடக்கியவள் அல்லவா அந்த மகாலட்சுமி! அதனால், கண்ணனின் மனைவி நப்பின்னையை முதலில் எழுப்பி, கண்ணனை எழுப்பும்படி வேண்டுகிறார்கள் நோன்பிருக்கும் பெண்கள்.
பாடல் - 18
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
பொருள்: சூரியனின் ஒளிக்கீற்று வெளிப்பட்டதும் விண்ணிலுள்ள நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி மறைந்தனவோ, அப்படி அண்ணாமலையாரின் திருவடியைப் பணிந்ததும், தேவர்களின் மணிமுடியிலுள்ள நவ ரத்தினங்கள் ஒளி இழந்தன. பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும் என முப்பிரிவாகவும் திகழும் அவர் வானமாகவும், பூமியாகவும், இவையல்லாத பிற உலகங்களாகவும் திகழ்கிறார். கண்ணுக்கு இனிய அமுதம் போல் தோன்றும் அவரது சிலம்பணிந்த திருவடிகளைப் புகழ்ந்து பாடி. பூக்கள் மிதக்கும் இந்தக் குளத்தில் பாய்ந்து நீராடுங்கள்.
விளக்கம்: ஆண் இனம், பெண்ணினம் நீங்கலாக திருநங்கை என்ற இனம் இருக்கிறது. இறைவனின் படைப்பில் எதுவுமே கேலிக்குரியதல்ல. அந்த சிவனே திருநங்கையாக (அர்த்தநாரி) இருக்கும்போது, மனிதப்படைப்பில் இருப்பதில் வியப்பில்லையே! எல்லா உயிர்களையும் பரம்பொருளாகக் காண வேண்டும் என்பது இப்பாடலின் உட்கருத்து.


