Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஓசூரில் இன்று அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

ஓசூரில் இன்று அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

ஓசூரில் இன்று அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

ஓசூரில் இன்று அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

ADDED : ஜன 03, 2011 12:02 AM


Google News
Latest Tamil News

சென்னை : 'ஓசூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க., சார்பில், இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.



அவரது அறிக்கை: நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நகராட்சி நிர்வாகத்தின் பங்கு இன்றிமையாதது என்று சொன்னால் அது மிகையாகாது.

உள்கட்டமைப்புகளில் அதிக முதலீடு, மேன்மையான நகர வசதிகள் ஆகியவை தான் நமது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன. கடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில் பெரும்பாலான நகராட்சிகளில் அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாத அவல நிலை நிலவுகிறது. ஓசூர் நகராட்சியை எடுத்துக் கொண்டால், நகராட்சி முழுவதும் குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்கவில்லை என்றும், பெங்களூரில் இருந்து கெலவரப்பள்ளி அணைக்கு வரும் மாசு படிந்த நீர், சுத்திகரிப்பு செய்யப்படாததால், பல்வேறு கிருமிகள் தாக்கி பொதுமக்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததாலும், நோய்கள் பரவுகின்றன என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.



ஓசூர் நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்களை நகராட்சி நிர்வாகமும், காவல் துறையும் கண்டு கொள்ளாததால், பொதுமக்கள் பஸ் நிலையத்திற்குச் செல்ல அச்சப்படுகின்றனர். இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரியாததால், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது.



ஓசூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், வீட்டு வரியை பல மடங்கு உயர்த்தியுள்ள நகராட்சி நிர்வாகம், அதன் ஊழியர்களுக்கு தாமதமாக சம்பளம் வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி, நகராட்சி ஊழியர்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே குடிநீர் பற்றாக்குறை, சுகாதார சீர்கேடு, தெரு விளக்குகள் எரியாமை என பல்வேறு இன்னல்களுக்கு மக்களை ஆளாக்கிக் கொண்டிருக்கும் ஓசூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க., சார்பில், நகராட்சி அலுவலகம் முன் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us