/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தமிழகம் முழுவதுமாக தக்காளி விலை கடும் சரிவு :வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.3க்கு விற்பனைதமிழகம் முழுவதுமாக தக்காளி விலை கடும் சரிவு :வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.3க்கு விற்பனை
தமிழகம் முழுவதுமாக தக்காளி விலை கடும் சரிவு :வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.3க்கு விற்பனை
தமிழகம் முழுவதுமாக தக்காளி விலை கடும் சரிவு :வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.3க்கு விற்பனை
தமிழகம் முழுவதுமாக தக்காளி விலை கடும் சரிவு :வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.3க்கு விற்பனை
ADDED : ஜூலை 27, 2011 01:12 AM
ஈரோடு: தமிழகத்தில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பால், வரத்து அதிகரித்து, கடும் விலை சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் கிலோ, 10 ரூபாய்க்கு விற்ற தக்காளி, தற்போது கிலோ, மூன்று ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உடுமலை, தர்மபுரி மாவட்டம் ராயக்கோட்டை, போச்சம்பள்ளி, பாலக்கோடு, ஓசூர் மற்றும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சேலம் மாவட்டம் ஆத்தூர், மேட்டூர், கொளத்தூர், வாழப்பாடி ஆகிய இடங்களில், நாட்டுத்தக்காளி, கிராஸ் தக்காளி ஆகியவை அதிகளவில் உற்பத்தியாகிறது. பெங்களூரு, ஓசூர் பகுதிகளில், 'பெங்களூரு' ரக தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. கிராஸ் தக்காளி, பெங்களூரு தக்காளி ஆகியவை பத்து நாட்கள் வரை வைத்து பயன்படுத்த முடியும், ஆனால், நாட்டு தக்காளி அதிகபட்சமாக ஐந்து நாட்களுக்கு மேல் வைத்து பயன்படுத்த முடியாது. இங்கிருந்து பெட்டிகளில் தக்காளியை வைத்து, சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கு அனுப்புகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் தினமும், 10 முதல், 15 டன்கள் தக்காளி விற்பனையாகிறது. இரண்டு மாதங்களாகவே, தர்மபுரி, கோவை மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் அதிகரித்ததால், உரிய விலை கிடைக்காமல், விவசாயிகள் தவித்தனர். விவசாயிகளிடம், 15 கிலோ பெட்டி, 40 ரூபாய்க்கு வாங்கி வந்து, கிலோ, 10 ரூபாய்க்கு வியாபாரிகள் விற்றனர். தற்போது விளைச்சல் அதிகரித்ததால், பல்வேறு இடங்களில் இருந்து வரத்தும் அதிகரித்துள்ளது. 15 கிலோ பெட்டி மொத்த விலைக்கு, 30 ரூபாய்க்கும், பத்து கிலோ பெட்டி, 20 முதல், 25 ரூபாய் வரை விற்கிறது. ஈரோடு பெரிய மார்க்கெட் மற்றும் உழவர் சந்தையில், நாட்டுத் தக்காளி கிலோ மூன்று ரூபாய்க்கும், கிராஸ் தக்காளி நான்கு ரூபாய்க்கும், பெங்களூரு தக்காளி சிறியது கிலோ ஐந்து ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஈரோடு, சேலம் மாவட்டத்தில் மழை பெய்வதால், தக்காளி செடிகளிலிலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. வரத்து குறைந்தால் மட்டுமே, தக்காளி விலை உயரும், இல்லையேல், நஷ்டத்தை தவிர்க்க, பெங்களூரு தக்காளியை அதிகமாக வாங்கி விற்பனை செய்வோம் என, ஈரோடு மார்க்கெட் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.