/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தமிழக முதல்வரை சந்திக்க பி.சி.சி., நிர்வாகிகள் முடிவுதமிழக முதல்வரை சந்திக்க பி.சி.சி., நிர்வாகிகள் முடிவு
தமிழக முதல்வரை சந்திக்க பி.சி.சி., நிர்வாகிகள் முடிவு
தமிழக முதல்வரை சந்திக்க பி.சி.சி., நிர்வாகிகள் முடிவு
தமிழக முதல்வரை சந்திக்க பி.சி.சி., நிர்வாகிகள் முடிவு
ADDED : ஜூலை 28, 2011 09:15 PM
பல்லடம் : 'தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் கறிக்கோழிகளுக்கு விதிக்கப்படும் 12.50 சதவீத நுழைவு வரியை கேரள அரசு நான்கு சதவீதமாக குறைக்க வலியுறுத்த வேண்டும்' என்ற கோரிக்கையை, தமிழக முதல்வரிடம் தெரிவிக்க,பல்லடம் பி.சி.சி., நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில் கறிக்கோழி உற்பத்தியில் பல்லடம், பொங்கலூர், உடுமலை அடங்கிய பல்லடம் பகுதி முதலிடத்தில் உள்ளது.
இதுதவிர, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பல இடங்களில் கறிக்கோழி உற்பத்தி பரவலாக நடந்து வருகிறது. பல்லடம் பகுதியில் மட்டும் வாரத்துக்கு 35 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவைகளில் 12 லட்சம் கோழிகள் வரை, கேரளாவுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மீதமுள்ள கோழிகள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பண்ணை கொள்முதல் விலை கடுமையாக வீழ்ச்சி அடையும் நேரங்கள் மட்டும் ஆந்திராவுக்கு அனுப்பப்படுகின்றன.கர்நாடகா, ஆந்திரா மாநில அரசுகள் வெளிமாநிலங்களில் இருந்து வரும் கறிக்கோழிகளுக்கு நுழைவு வரி விதிப்பதில்லை. ஆனால், கேரள அரசு 12. 5 சதவீதம் நுழைவு வரி வசூலிக்கிறது. கேரளாவில் கறிக்கோழி விலை உயர்ந்து நுகர்வு குறைவதாக கறிக்கோழி உற்பத்தியாளர்கள், பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.பல்லடம் பிராய்லர் கோர்டினேஷன் கமிட்டி (பி.சி.சி.,) செயலாளர் சுவாதி கண்ணன் கூறுகையில், ''பல்லடம் பகுதியில் வாரத்துக்கு 35 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவைகளில், 12 லட்சத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது, ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை ரூ.43. உற்பத்தி செலவு ரூ.47 ஆக உள்ளது. கிலோவுக்கு நான்கு ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. தொழிலை தொடர்ந்து நடத்துவது மிகவும் கஷ்டமாக உள்ளது. ''நுழைவு வரியை 12.50 சதவீதத்தில் இருந்து நான்கு சதவீதமாக கேரள அரசு குறைத்தால் கறிக்கோழி உற்பத்தி தொழில் செழிக்கும். இக்கோரிக்கையை கேரள அரசிடம் வலியுறுத்தி பேச்சு நடத்த வேண்டும். இதற்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பி.சி.சி., நிர்வாகிகள் சந்திக்க முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.


