Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நில அபகரிப்பு குற்றவாளிகள் வெளிமாநிலங்களில் பதுங்கல் : மேலும் ஒரு தனிப்படை அமைத்து கமிஷனர் உத்தரவு

நில அபகரிப்பு குற்றவாளிகள் வெளிமாநிலங்களில் பதுங்கல் : மேலும் ஒரு தனிப்படை அமைத்து கமிஷனர் உத்தரவு

நில அபகரிப்பு குற்றவாளிகள் வெளிமாநிலங்களில் பதுங்கல் : மேலும் ஒரு தனிப்படை அமைத்து கமிஷனர் உத்தரவு

நில அபகரிப்பு குற்றவாளிகள் வெளிமாநிலங்களில் பதுங்கல் : மேலும் ஒரு தனிப்படை அமைத்து கமிஷனர் உத்தரவு

ADDED : ஆக 03, 2011 12:48 AM


Google News

சேலம் : சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு, பிரிமியர் ரோலர் மில் அபகரிப்பு, தாசநாயக்கன்பட்டி பாலமோகன்ராஜ் என்பவரின் நில மோசடி வழக்குகளில் சிக்கி, தலைமறைவு குற்றவாளியாக வலம் வருபவர்கள், வெளிமாநிலங்களில் தங்கி இருந்து, போலீசாருக்கு தொடர்ந்து, 'தண்ணி காட்டி' வருகின்றனர்.

குற்றவாளிகளை பிடிப்பதற்கு, நேற்று மேலும் ஒரு தனிப்படையை அமைத்து, கமிஷனர் சொக்கலிங்கம் உத்தரவிட்டுள்ளார். சேலம் அங்கம்மாள் காலனி நில விவகார வழக்கில், போலீசார், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தி.மு.க.,வை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிக பூபதி, காங்கிரஸ் பிரமுகர்கள் எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, உலகநம்பி, கவுன்சிலர் ஜிம்மு ராமு, மகேந்திரன், சித்தானந்தம், கனகராஜ், ஆட்டோ முருகன், கறிக்கடை பெருமாள், ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், ஓய்வு பெற்ற ஆர்.டி.ஓ., பாலகுருமூர்த்தி ஆகிய 13 பேர் மீது, எட்டு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.



இந்த வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் எம்.ஏ.டி. கிருஷ்ணசாமி, கனகராஜ், ஆட்டோ முருகன், கறிக்கடை பெருமாள் ஆகியோர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை, தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த பாலமோகன்ராஜின், நிலத்தை மோசடி செய்து வாங்கிய வழக்கில், ஜூலை 30ல், சேலம் மாநகர போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கிலும், கவுசிக பூபதி, பாரப்பட்டி சுரேஷ்குமார் ஆகியோர், குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிக பூபதி மீது, ஆட்சி மாற்றத்துக்கு பின், தொடர்ந்து வழக்குகள் பாய்ந்து வந்தாலும், அவர்களை கைது செய்யும் முயற்சியில், போலீசார் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வருகின்றனர்.



குற்றவாளிகளுக்கு துணை போன, சேலம் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணி மாற்றம் செய்யப்பட்டனர். இவர்களில் பலர், சேலம் மாநகரில் தான் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் லட்சுமணன், காங்கிரஸ் பிரமுகர் உலகநம்பி, கவுன்சிலர் ஜிம்மு ராமு, மகேந்திரன், சித்தானந்தம், ஓய்வு பெற்ற ஆர்.டி.ஓ., பாலகுருமூர்த்தி உள்ளிட்டவர்களை கைது செய்வதில், போலீசார் கடும் சிரமத்தையே சந்தித்து வருகின்றனர்.



இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக, 12 தனிப்படையை அமைத்துள்ளதாக கமிஷனர் சொக்கலிங்கம் தெரிவித்தார். ஆனால், ஓய்வு பெற்ற, சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் பாஸ்கரன் தலைமையில், உதவி கமிஷனர் பிச்சை ஆகியோரை கொண்ட குழு, குற்றவாளிகளை கைது செய்யாமல் கோட்டை விட்டது. இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள எட்டு பேரை கைது செய்ய, மாநகர போலீஸ் சார்பில் அமைக்கப்பட்ட குழுக்களில் எதுவும் குற்றவாளிகளை பிடிப்பதில் அக்கறை காட்டவில்லை. ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் லட்சுமணன் போலீஸ் வலையில் சிக்கி விட்டதாக, கடந்த வாரமே போலீஸ் தரப்பில் இருந்து தகவல்கள் கசியத் துவங்கியது.



இருந்த போதிலும் அவர் தொடர்ந்து, போலீஸ் கஸ்டடியில் இருந்து வருவதாகவும், அவரை அப்ரூவராக மாற்ற முயற்சி நடந்து வருவதாகவும், போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், இதை கமிஷனர் சொக்கலிங்கம் மறுத்து வரும் நிலையில், சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சிறப்பு குழு, ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் லட்சுமணனை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.



பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிக பூபதி ஆகியோர், தொடர்ந்து தங்களின் கட்சி பிரமுகர்கள், விசுவாச போலீஸ் அதிகாரிகளுடன், மொபைலில் பேசிக் கொண்டு தான் இருக்கின்றனர். நேற்றைய தகவல்படி அவர்கள் கோவா, மகாராஷ்டிரா மாநில புனே ஆகிய இடங்களில், மாறி மாறி தங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், பெங்களூரில் உள்ள ஒரு அபார்ட்மென்ட்களுக்கும், அடிக்கடி வந்து செல்வதாக, தி.மு.க.,வினர் மத்தியில் செய்திகள் பரவி வருகின்றன. தொடர்ந்து, விமானத்தில் பறந்து, சேலம் மாநகர போலீசாருக்கு 'தண்ணி காட்டி' வருகின்றனர்.



நேற்று கமிஷனர் சொக்கலிங்கம், சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் சத்யப்பிரியா தலைமையில், கூடுதல் துணை கமிஷனர் ராஜராஜன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ.,கள் ரவிக்குமார், பழனியாண்டி, ரமேஷ்குமார், ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையில் மேலும் ஒரு தனிப்படையை அமைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த தனிப்படை போலீசார், நேற்று இரவு முதல் குற்றவாளிகளை பிடிப்பதற்கான நடவடிக்கையில், களம் இறங்கி உள்ளனர். எத்தனை தனிப்படை அமைத்தாலும், மாஜிக்கு விசுவாசமாக இருக்கும் அதிகாரிகள் இன்னும் சேலம் மாநகர போலீசில் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களை முற்றிலும் களை எடுத்தால் மட்டுமே, குற்றவாளிகளை கைது செய்ய இயலும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us