ADDED : ஆக 28, 2011 11:48 PM
அன்னூர் : தமிழக அரசின் இலவச ஆடு வழங்கும் திட்டத்தில், அன்னூர் வார
சந்தையில் 22 பயனாளிகளுக்கு 88 ஆடுகள் வாங்கப்பட்டன. இலவச ஆடுகள் வழங்கும்
திட்டத்தில், ஏழைகளிலும் ஏழையாக உள்ள பெண்களுக்கு, தலா நான்கு ஆடுகள்
வழங்கப்படுகின்றன. ஒரு ஆட்டுக்கு 2,500 ரூபாய் வீதம் 10 ஆயிரம் ரூபாயும்,
கொட்டகை அமைக்க 2 ஆயிரம் ரூபாய் என 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
முதல் கட்டமாக, கோவை மாவட்டத்தில் எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தை சேர்ந்த
அத்திப்பாளையம் ஊராட்சியும், பொள்ளாச்சி (வடக்கு) ஒன்றியத்தை சேர்ந்த
ஏ.நாகூர் ஊராட்சியும் தேர்வு செய்யப்பட்டன. அத்திப்பாளையத்தில் கலெக்டர்
கருணாகரன் தலைமையில் நடந்த கிராமசபை கூட்டத்தில் 27 பயனாளிகள்
அறிவிக்கப்பட்டனர். 'ஆடுகளை பயனாளிகளே அருகிலுள்ள சந்தையில் பேரம்பேசி
வாங்கிக் கொள்ளலாம்' என்று, அரசு அறிவித்துள்ளது இதன்படி கால்நடை இணை
இயக்குனர் தலைமையில், டாக்டர் மணிமாறன் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் அடங்கிய
குழுவினருடன் 22 பயனாளிகளும் அன்னூர் வாரச்சந்தைக்கு வந்தனர். பயனாளிக்கு
தலா 12 ஆயிரம் ரூபாய் ஒதுக் கப்பட்டது. ஒவ்வொரு பயனாளிக்கும், மூன்று பெண்
ஆடுகளும், ஒரு கிடாயும் வாங்கப்பட்டது.
'மீதமுள்ள ஐந்து பயனாளிகளுக்கும் விரைவில் ஆடுகள் வழங்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


