Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அரசியல் ஆதாயத்திற்காக வன்முறை செயல்களா? ஜெயலலிதா

அரசியல் ஆதாயத்திற்காக வன்முறை செயல்களா? ஜெயலலிதா

அரசியல் ஆதாயத்திற்காக வன்முறை செயல்களா? ஜெயலலிதா

அரசியல் ஆதாயத்திற்காக வன்முறை செயல்களா? ஜெயலலிதா

UPDATED : செப் 13, 2011 05:36 AMADDED : செப் 12, 2011 11:32 PM


Google News
Latest Tamil News
சென்னை:'' அரசியல் ஆதாயத்திற்காக வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது,'' என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்தார்.

பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு, சட்டசபையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா அளித்த பதில்:

தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான இம்மானுவேல் சேகரனின், 54 வது நினைவு நாள் அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில், முன்கூட்டியே போலீஸ் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.கடந்த 9ம் தேதி பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் பழனிகுமார், முத்துராமலிங்கபுரத்தில் நடந்த நாடகத்தை பார்த்துவிட்டு, நள்ளிரவில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் பச்சேரி அருகில் சில நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக ஆறுமுகம் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.



சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஜான் பாண்டியனை ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழைய கலெக்டர் தடை விதித்தார். இம்மானுவேல் சேகரனின் சமாதியில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சார்ந்தோர் மரியாதை செலுத்தினர்.கலெக்டரின் தடையை மீறி, பரமக்குடி நோக்கிச் சென்ற ஜான்பாண்டியனை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர். அவரது ஆதரவாளர்கள் 500 பேர் பரமக்குடி நகர போக்குவரத்தை சீர்குலைக்கும் வகையில், சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். போலீசாரின் அறிவுரையை மறுத்ததோடு மட்டுமல்லாமல், போலீசார் மீது கற்களை எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.



இருப்பினும் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் பெருமளவு வன்முறையில் ஈடுபட்டு, போலீசாரின் வஜ்ரா வாகனம் மற்றும் தீயணைப்பு வண்டிக்கு தீ வைத்தனர்.இதையடுத்து போலீசார் மீது கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வன்முறையாளர்கள் தொடர்ந்து வீசியதால் தற்காப்பு நடவடிக்கையாகவும், பொதுச் சொத்துக்களை பாதுகாக்கும் வகையிலும், போலீசார் துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் துரதிருஷ்டவசமாக உயிரிழந்தனர்.

இந்த நிகழ்வில் டி.ஐ.ஜி., சந்தீப் மிட்டல், டி.எஸ்.பி., கணேசன், இன்ஸ்பெக்டர் அதிசயராஜ் மற்றும் பல போலீசார் காயமடைந்தனர்.



ஜான்பாண்டியன் கைதை எதிர்த்து, மதுரை சிந்தாமணி சந்திப்பிலும் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர். மேலும், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மீது கல் எறிந்தனர்.அதன் காரணமாக மூன்று போலீசார் காயமடைந்தனர். பாதுகாப்புப் பணியில் இருந்த இன்ஸ்பெக்டரை தாக்க முற்பட்ட போது, தற்பாதுகாப்புக்காக இன்ஸ்பெக்டர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவருக்கு சாதாரண காயம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவர் பழனிகுமாரின் குடும்பத்திற்கும், இந்த நிகழ்வில் காயம் அடைந்தவர்களுக்கும் தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.



சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், ஒரு சிலரின் அரசியல் ஆதாயத்திற்காக இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

வன்முறைக்கு வித்திட்டு, பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் ஊறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதை நாம் அனைவரும் வன்மையாக கண்டிக்க வேண்டும்.

இதுபோன்ற வன்முறைச் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். இந்தத் துயர சம்பவம் தொடர்பாக டி.ஆர்.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை கிடைத்த பின், தக்க மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us