ADDED : ஆக 06, 2011 09:40 PM
சிவகாசி:சிவகாசி நகராட்சி வணிக வளாகத்தில் டாஸ்மாக் செயல்படுவதால்,
குடிகாரர்கள் ஆதிக்கத்தால் இங்குள்ள கடைகள், 10 ஆண்டுகளாக முடங்கிய
நிலையில், வாகன காப்பகத்தையும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது.சிவகாசி நகராட்சி சார்பில் சிவன் மாடவீதியில் 85 லட்சம்
ரூபாய் செலவில் 40 கடைகளுடன் வணிக வளாகமும், கீழ் தளத்தில் வாகன காப்பகமும்
கட்டப்பட்டன. பஜாரில் வணிக வளாகம் கட்டப்பட்டதால் வியாபாரிகளும் கடைகளை
போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர். கடைவீதிக்கு பைக், டூவீலர்,சைக்கிளில்
வருவோருக்கு வாகன காப்பகமும் வசதியாக அமைந்தது. இவ்வளவு வசதிகள் கொண்ட வணிக
வளாகம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் முடங்கி உள்ளது. இங்குள்ள கடைகளில்
ஒன்று 'டாஸ்மாக்' மற்றொரு கடை 'பார்' நடத்தவும் அனுமதிக்கப்பட்டதால்,
இங்குவருவதை மக்களும் புறக்கணித்தனர். இதனால் கடைகளை வாடகைக்கு
எடுத்தவர்கள் இதை மூடியநிலையில் குடேனாக பயன்படுத்துகின்றனர். வணிக
வளாகத்தில் 'டாஸ்மாக்' இருப்பதால் குடிமகன்கள் ஆதிக்கமும் அதிகரித்துள்ளது.
பலர் போதையில் வளாகத்திற்குள் சிறுநீர், மலம் கழித்து அசிங்க படுத்துவதால்
துர்நாற்றம் வீசும் வளாகமாக மாறியுள்ளது. வளாக கடைபகுதியில்தான் இந்நிலை
என்றால், கீழ்தளத்தில் இயங்கிய வாகன காப்பகத்தையும் பொதுமக்கள் பயன்படுத்த
முடிவதில்லை.
பழக்கடை நடத்துபவர்கள் இதை ஆக்கிரமித்துள்ளதால், வாகன ஓட்டிகள் சிவன்கோயில்
முன் வாகனத்தை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்கின்றனர்.
முத்தீஸ்வரன் கூறுகையில்,''டாஸ்மாக் கடை வந்தது முதல் பொதுமக்கள் வணிக
வளாகத்திற்குள் வருவது இல்லை. வியாபாரம் முடங்கி விட்டது. மது
அருந்தியவர்கள் கடைகள் முன் அசிங்கப்படுத்துகின்றனர்,''என்றார். இங்குள்ள
டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றி, பொதுமக்கள் வந்து செல்லும் வகையில்
வணிக வளாகம் செயல்பட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்வதோடு, சிவன்
கோயில் முன் வாகன நிறுத்தத்திற்கு தடை விதித்து, வணிகவளாகத்தில்உள்ள வாகன
காப்பகத்தையும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


