/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பல கோடி ரூபாய் நிலம் அபகரிப்பு; 29 பேர் கைது :500 புகார்கள் மீது விசாரணை; பிரமுகர்கள் ஓட்டம்பல கோடி ரூபாய் நிலம் அபகரிப்பு; 29 பேர் கைது :500 புகார்கள் மீது விசாரணை; பிரமுகர்கள் ஓட்டம்
பல கோடி ரூபாய் நிலம் அபகரிப்பு; 29 பேர் கைது :500 புகார்கள் மீது விசாரணை; பிரமுகர்கள் ஓட்டம்
பல கோடி ரூபாய் நிலம் அபகரிப்பு; 29 பேர் கைது :500 புகார்கள் மீது விசாரணை; பிரமுகர்கள் ஓட்டம்
பல கோடி ரூபாய் நிலம் அபகரிப்பு; 29 பேர் கைது :500 புகார்கள் மீது விசாரணை; பிரமுகர்கள் ஓட்டம்
ADDED : ஜூலை 13, 2011 02:18 AM
கோவை : தமிழக மேற்கு மண்டலத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தனியார்
நிலங்களை மோசடியான முறையிலும், அத்துமீறியும் அபகரித்தது தொடர்பாக 56
வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 29 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்
500க்கும் மேற்பட்ட புகார்கள் மீதான விசாரணை
தீவிரப்படுத்தப்பட்டிருப்பதால், நில அபகரிப்பு புகாரில் சிக்கியுள்ள
அரசியல் பிரமுகர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் கைதுக்கு பயந்து
தப்பியோடிவிட்டனர். கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல்,
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும்
100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தனியார் சொத்து, நிலங்கள்
அபகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோடிக்கணக்கான மற்றும் பல
லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலங்களை அத்துமீறி ஆக்கிரமித்து அரசியல்
பிரமுகர்கள், ரியல் எஸ்டேட் புரமோட்டர்கள் பறித்துக்கொண்டதாக புகார்
எழுந்துள்ளது. நில அபகரிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என,
தமிழக மேற்கு மண்டல போலீசார் வெளிப்படையான அறிவிப்பை வெளியிட்டபின், கடந்த
ஒரு மாதத்தில் மட்
டும் 631 பேர் புகார் அளித்துள்ளனர். இவர்களது புகாரின் மீது உடனடி
நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக மாவட்டம் தோறும் டி.எஸ்.பி., மற்றும்
இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனி போலீஸ் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
பெறப்பட்ட புகார் மனுக்களிலுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார்
விசாரணை நடத்தியதில், '51 புகார்களில் உண்மையில்லை' என தெரியவந்து,
அவற்றின் மீதான மேல் நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன. மேலும், 56
புகார்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஈரோட்டில் ஒருவரும்,
திருப்பூரில் ஒன்பது பேரும், சேலத்தில் ஆறு பேரும், நாமக்கல் மற்றும்
தர்மபுரியில் தலா மூவரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏழு பேரும் கைது
செய்யப்பட்டுள்ளளனர். மீதமுள்ள 500க்கும் மேற்பட்ட புகார்களின் மீது
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையறிந்து, குற்றச்சாட்டில்
தொடர்புடைய அரசியல் பிரமுகர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் தப்பியோடி
தலைமறைவாகிவிட்டனர்.தனிப்பிரிவுக்கு கூடுதல் பலம்: நில அபகரிப்பு
குற்றங்களை விசாரிக்க தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் தனிப்பிரிவு
அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டத்தின் குற்ற ஆவண காப்பக
டி.எஸ்.பி.,கள் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,கள் தலைமை
அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கீழ் ஒரு இன்ஸ்பெக்டர்,
இரண்டு எஸ்.ஐ.,கள், எட்டு கான்ஸ்டபிள்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். நில
அபகரிப்பு குறித்த புகார்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து
வருவதால், தனிப்பிரிவின் பலத்தை அதிகரிக்கும் முயற்சியை மேற்கு மண்டல
போலீஸ் ஐ.ஜி., அலுவலகம் மேற்கொண்டுள்ளது. மாவட்டம் தோறும் தனிப்பிரிவின்
தலைமை அதிகாரியாக ஒரு ஏ.டி.எஸ்.பி.,- இரு டி.எஸ். பி.,கள், இரு
இன்ஸ்பெக்டர்கள், நான்கு எஸ்.ஐ.,கள் மற்றும் 20 போலீசாரை நியமிப்பது
தொடர்பான கருத்துரு, டி.ஜி.பி., அலுவலகத்தின் பரிசீலனைக்கு
அனுப்பபட்டுள்ளது. இதற்கான அனுமதி கிடைத்ததும், தனிப்பிரிவுக்கு மேலும் பல
அதிகாரிகள், போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். போலீஸ் உயரதிகாரி ஒருவர்
கூறுகையில், 'நில அபகரிப்பு குற்றங்கள் தொடர்பான பல புகார்களில்
கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் விசாரணை அதிகாரிகளை அதிர்ச்சியடையச்
செய்துள்ளன. நில உரிமையாளருக்கே தெரியாமல், அவரது பெயரில் போலி
பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு, மோசடியான முறையில் துணிந்து பல கோடி ரூபாய்
மதிப்பிலான நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற வழக்குகளில்,
பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கச் செய்யும்
வகையில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என்றார்.


