நியாயம் வெல்லும், நீதி நிலைக்கும்: சி.பி.ஐ., ரெய்டு குறித்து கருணாநிதி
நியாயம் வெல்லும், நீதி நிலைக்கும்: சி.பி.ஐ., ரெய்டு குறித்து கருணாநிதி
நியாயம் வெல்லும், நீதி நிலைக்கும்: சி.பி.ஐ., ரெய்டு குறித்து கருணாநிதி

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:சி.பி.ஐ.,யின் சோதனைகளால் பாதிக்கப்படும், கலாநிதி, தயாநிதி பற்றி கருணாநிதியும், தி.மு.க.,வும் கவலைப்படவில்லை, அவர்களுக்கு ஆதரவு தரவும் முன்வரவில்லை என, செய்திகள் வெளியாகியுள்ளன.கனிமொழி மீதான வழக்கு, கலாநிதி, தயாநிதி மீதான சி.பி.ஐ., சோதனை குறித்து, நான் எந்தக் கருத்தும் வெளியிடாமல் இருந்ததற்கும், இருப்பதற்கும், மத்திய அரசுக்கு இதில் சம்பந்தமில்லை என்பதும், சி.பி.ஐ., மற்றும் கோர்ட் நடவடிக்கைகளில் நாங்கள் தலையிடுவதில்லை என்பதுமே காரணம். அதனால், இதுவரையில் இந்த பிரச்னையை, அரசியலாக்க முன்வரவும் இல்லை; அதற்கு விருப்பமும் இல்லை.
ஆனால், எங்கள் குடும்பத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தி, குதூகலிக்கலாம் என, எண்ணும் சிலர், கடுகை மலையாக்கி, பூதாகரமாக்குகின்றனர். நெருக்கடி கால சூழ்நிலைகளை போல, இன்று நெருப்பு பிழம்பாக தாக்கும் எந்த முயற்சிகளையும், சட்ட ரீதியாக எதிர்கொள்ளவும், அவற்றில் வெற்றி பெறவும், என் பேரப்பிள்ளைகளுக்கு என் ஆதரவு இன்றும், என்றும் உண்டு. சி.பி.ஐ., வழக்கிலிருந்து, கனிமொழி விடுதலையாக வேண்டும் என்று எனக்குள்ள ஆர்வம், கலாநிதி, தயாநிதி ஆகிய பேரப்பிள்ளைகளும் வழக்குகளிலிருந்து, விடுபட வேண்டும் என்பதிலும் உண்டு. மத்திய, மாநில அரசாலும் அல்லது அவர்களுக்கு தொடர்பு இல்லை என சொல்லப்படும், சி.பி.ஐ., நிறுவனங்களாலும், தி.மு.க.,வினர் மீது பாயும் கொடுங்கணைகள் எதுவாயினும், அதை சட்ட ரீதியாக சந்தித்து, நியாயமான முடிவு காண, நான் என்றைக்கும் தயங்கியதும் இல்லை. தயங்கப் போவதும் இல்லை .நியாயம் வெல்லும், நீதி நிலைக்கும் என்பதில் எனக்கு நிறைந்த நம்பிக்கை உண்டு.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.


