உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழக காங்., முஸ்தீபு: டில்லியில் "டிஸ்கஷனை' ஆரம்பிச்சுட்டாங்க
உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழக காங்., முஸ்தீபு: டில்லியில் "டிஸ்கஷனை' ஆரம்பிச்சுட்டாங்க
உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழக காங்., முஸ்தீபு: டில்லியில் "டிஸ்கஷனை' ஆரம்பிச்சுட்டாங்க
ADDED : செப் 06, 2011 12:11 AM
புதுடில்லி: உள்ளாட்சித் தேர்தலில் எந்த மாதிரியான அணுகுமுறையை மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டில்லியில் முகாமிட்டுள்ளனர். சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.,விடம் போராடி தொகுதிகளை பெற்றது போல் இல்லாமல், இம்முறை அதிக இடங்களைப் பெற இப்போதே வியூகம் வகுப்பதற்காக, 'டிஸ்கஷனை' ஆரம்பிச்சுட்டாங்க. அக்டோபர் மாதம் இறுதிவாக்கில் உள்ளாட்சித் தேர்தல்கள் தமிழகத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபைத் தேர்தலில் கண்ட வெற்றி, தோல்வி எல்லாவற்றையும் மறந்துவிட்டு, தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாமே உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, முக்கிய தேசியக் கட்சியான காங்கிரசும், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதற்குண்டான நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், மாற்று ஏற்பாடு எதையும் செய்யாத காரணத்தால் தலைவராக நீடித்து வரும் தங்கபாலு நேற்று டில்லிக்கு வந்திருந்தார்.நேற்று பார்லிமென்டுக்கு வந்திருந்த தங்கபாலு, அங்கு தமிழக எம்.பி.,க்கள் சில பேரிடம், உள்ளாட்சித் தேர்தல் குறித்து கருத்துக்களை கேட்டறிந்துள்ளார். கிருஷ்ணசாமி, விஸ்வநாதன், ராமசுப்பு உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.,க்களை தனித்தனியாக சந்தித்து, ஒவ்வொருவரிடமும் உள்ளாட்சித் தேர்தல் அணுகுமுறை குறித்து ஆலோசனை செய்தார். இது தவிர, தேசியவாத காங்கிரசின் தமிழகத் தலைவர் ராஜேஸ்வரனுடனும் தங்கபாலு பேசினார். டில்லி மேலிடத் தலைவர்களை சந்தித்துப் பேசுவதற்கு முன், தமிழக காங்கிரஸ் தலைவர்களையும், எம்.பி.,க்களையும் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள தங்கபாலு திட்டமிட்டுள்ளார். இதற்காக நான்கைந்து நாட்களுக்கு டில்லியிலேயே தங்கபாலு தங்கவுள்ளார்.எம்.பி.,க்களிடம் பேசியது குறித்து தங்கபாலுவை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'உள்ளாட்சித் தேர்தல்கள் விரைவில் நடைபெறவுள்ளன. இதற்காக காங்கிரஸ் தமிழகத்தில் தன்னை தயார்படுத்த வேண்டியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களை எப்படி சந்திப்பது என்பது குறித்தும், இதில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய அணுகுமுறைகள் என்னென்ன என்பது குறித்தும் முக்கிய தலைவர்களிடம் ஆலோசனை நடத்த வேண்டியிருக்கிறது. தமிழக எம்.பி.,க்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டது. காங்கிரசுக்குள் நடக்கும் இந்த ஆலோசனைகள் இன்னும் முடிவடையவில்லை. இது முடிந்த பின்னரே தி.மு.க.,வுடன் கூட்டணி குறித்தும், கூட்டணியில் காங்கிரசுக்குண்டான ஒதுக்கீடு குறித்தும் அடுத்த கட்டமாக முடிவு செய்யப்படும்' என்றார்.
தங்கபாலுவின் ஆலோசனை குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறும் போது, 'எம்.பி.,க்களுடன் அவர் முதற்கட்டமாக ஆலோசித்துள்ளார். அந்த ஆலோசனையின் போது, முக்கியமான விஷயம் ஒன்று பேசப்பட்டது. அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், விண்ணப்பக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. வாசன், சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களிடம் பேசிவிட்டு, மேலிடத் தலைவர் குலாம் நபி ஆசாத்துடனும் ஆலோசனை மேற்கொள்ளப்படும். பின்னர், கூட்டணி குறித்து பேசுவதற்கும், இடங்கள் ஒதுக்கீடு செய்வது குறித்து தி.மு.க., வுடன் எவ்வாறு பேசி முடிப்பது என்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டியிருக்கும்.
பொதுவாக இது போன்ற விஷயங்களில் இறுதியாக சோனியாவிடம் ஆலோசனை பெற்று, அவர் கூறும் உத்தரவின்படி நடக்கப்படும். ஆனால், தற்போது அவர் மருத்துவச் சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ளார். தற்போதைக்கு அவரது இடத்தில் இருந்து கட்சியை பெரும்பாலான விஷயங்களில் நடத்திச் செல்வது, மத்திய அமைச்சர் அந்தோணி தான்.
அவரிடம் தான் அனேகமாக உள்ளாட்சித் தேர்தல் குறித்து இறுதி ஆலோசனை நடத்தப்படும். அவர் கூறும் வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழகத்தில் காங்கிரஸ் தனது உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை விரைவில் துவங்கும்' என்று கூறின. கடந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்று, 63 தொகுதிகளை வலியுறுத்தி வாங்கியது காங்கிரஸ். இது, மொத்த இடங்களில் 24 சதவீதம். எனவே, உள்ளாட்சித் தேர்தலில் இதை விட அதிக சதவீத பங்கீட்டை பெற வேண்டுமென்று காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கேற்ப காங்கிரசின் உள்ளாட்சித் தேர்தல் அணுகுமுறைகள் இருக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
-நமது டில்லி நிருபர்-


