கர்நாடகாவை போல கோவாவிலும் மெகா சுரங்க ஊழல் ரூ. 25 ஆயிரம் கோடி : விசாரணை குழு அமைக்க பாரதிய ஜனதா கட்ச
கர்நாடகாவை போல கோவாவிலும் மெகா சுரங்க ஊழல் ரூ. 25 ஆயிரம் கோடி : விசாரணை குழு அமைக்க பாரதிய ஜனதா கட்ச
கர்நாடகாவை போல கோவாவிலும் மெகா சுரங்க ஊழல் ரூ. 25 ஆயிரம் கோடி : விசாரணை குழு அமைக்க பாரதிய ஜனதா கட்ச
ADDED : அக் 08, 2011 10:54 PM

பனாஜி: கோவாவில் 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சுரங்க ஊழல் நடந்துள்ளதாக பாரதிய ஜனதா புகார் கூறியுள்ளது. கோவாவில் சட்ட விரோத சுரங்கத் தொழில் மூலம் இரும்பு தாதுக்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும், இதில் பல அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதால், விசாரிக்கப்பட வேண்டும்' எனவும் கர்நாடக லோக் ஆயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் குறித்து, கோவா சட்டசபையின் பொதுக் கணக்கு குழு ஆய்வு செய்து, ஆளும் கட்சிப் பிரமுகர்கள் பலருக்கும் சுரங்க ஊழலில் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சித் தலைவர் மனோகர் பரிக்கர் தலைமையிலான பொதுக் கணக்கு குழு, தனது அறிக்கையை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளது.
'சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட இரும்பு தாதுக்கள், துறைமுகங்கள் வழியாக பல நாடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இதன் மூலம் கிடைத்த பணம், மொரீஷியஸ் மற்றும் கேமேன் தீவுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில், 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்த ஊழல் நடந்துள்ளது' என, பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலர் கிரித் சோமய்யா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், 'கோவா சுரங்க ஊழல் குறித்த ஆதாரங்களை விஜிலன்ஸ் கமிஷனரிடமும், இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியிடமும் சமர்ப்பிக்க உள்ளோம். இந்த ஊழல் குறித்து, ஐகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு ஒன்று அமைத்து விசாரிக்கப்பட வேண்டும். விசாரணைக் குழுவை இரண்டு வார காலத்திற்குள் அமைக்க வேண்டும்' என்றார்.
கோவா சட்டசபை சபாநாயகர் பிரதாப் சிங் ரானே குறிப்பிடுகையில், 'சுரங்க ஊழலில் தேவையில்லாமல் யாருøடைய பெயரையும் குறிப்பிடக்கூடாது. இதனால், நமது மாநிலத்துக்கு கெட்ட பெயர் தான் ஏற்படும்' என்றார்.
பொதுக் கணக்கு குழுவின் தலைவரும், கோவா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மனோகர் பரிக்கர் கூறுகையில், 'ஊழலில் ஈடுபட்டவர்களை சபாநாயகர் பாதுகாத்து வருகிறார். பொதுக் கணக்கு குழுவின் அறிக்கையை சபையில் அவர் தாக்கல் செய்யாமல் உள்ளார். பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சுரங்க ஊழல் நடந்துள்ளது. இதை சி.பி.ஐ., அல்லது லோக் ஆயுக்தா விசாரிக்க வேண்டும். முறைகேடாக சுரங்கம் இயங்க அனுமதித்ததில், அப்போதைய முதல்வராக இருந்த ராணாவுக்கும் பங்கு உண்டு. 30 சுரங்கங்கள் முறைகேடாக செயல்பட்டதாகக் கூறப்படும் புகாரில் தற்போதைய முதல்வர் திகம்பர் காமத் 10 சுரங்கங்களுக்கு அனுமதியளித்துள்ளார்' என்றார்.
சட்டசபையில் சுகாதார அமைச்சர் குறிப்பிடுகையில், 'தேவையில்லாமல் சுரங்க ஊழலில் என் பெயரை இழுக்கின்றனர்' என்றார். இதற்கு மனோகர் பரிக்கர் கூறுகையில், 'இந்த ஊழலில் பாரதிய ஜனதாவினரும் சம்பந்தப்பட்டுள்ளனர்' என்றார்.
கோவா சட்டசபையில் பொதுக் கணக்கு குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்படாததை கண்டித்து எதிர்க்கட்சியினர் சட்டசபையில் இருந்து சமீபத்தில் வெளிநடப்பு செய்தனர். அதன்பின் சபாநாயகர் குறிப்பிடுகையில், 'சுரங்க ஊழல் குறித்த அறிக்கையை பொதுக் கணக்கு குழுவில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் ஏற்கவில்லை. என்னிடம் கொடுக்கப்பட்ட அறிக்கையில் மற்ற உறுப்பினர்களின் கையொப்பம் இல்லை. எனவே, இந்த அறிக்கையை நான் தீவிரமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது. அதனால் தான், சட்டசபையில் இந்த அறிக்கையை நான் தாக்கல் செய்யவில்லை' என்றார்.


