Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/விவசாய பணிக்கு கூலி ஆட்கள் தட்டுப்பாடு தர்மபுரியில் அதிக சிக்கல்

விவசாய பணிக்கு கூலி ஆட்கள் தட்டுப்பாடு தர்மபுரியில் அதிக சிக்கல்

விவசாய பணிக்கு கூலி ஆட்கள் தட்டுப்பாடு தர்மபுரியில் அதிக சிக்கல்

விவசாய பணிக்கு கூலி ஆட்கள் தட்டுப்பாடு தர்மபுரியில் அதிக சிக்கல்

ADDED : ஆக 08, 2011 01:29 AM


Google News
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கிராமப் பகுதிகளில், தேசிய ஊரக வேலை வாய்ப்புப் பணிக்கு, அதிக அளவில் பெண்கள் வேலைக்குச் செல்வதால், வேளாண் பணிகளுக்கு, கூலி ஆள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட தர்மபுரி மாவட்டத்தில், 60 சதவீதம் பேர் விவசாயம் சார்ந்த கூலி வேலைகள் செய்து வருகின்றனர். குறிப்பாக, கிராமப் பகுதியில், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். இது தவிர, கட்டடப் பணிகள், வீட்டு தோட்டப் பணிகளுக்கும், கூலி ஆள் அதிகம் செல்கின்றனர்.தர்மபுரி மாவட்டத்தில், கடந்த காலங்களில், விவசாயத் தொழில் போதிய மழையில்லாமல் பாதிக்கப்பட்ட நிலையில், பல தொழிலாளர்கள் வேலை வாய்ப்புக்காக, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களுக்கு, இடம் பெயர்ந்து விட்டனர். கட்டடப் பணிக்கு, தொழிலாளர்கள் பெருமளவில் கர்நாடகா மாநிலத்துக்கு, படையெடுத்து வருகின்றனர்.தர்மபுரி மாவட்டத்தில், மத்திய, மாநில அரசின் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ், ஏரி, குளம், குட்டைகள் உள்ளிட்ட, நீர் ஆதாரப் பகுதிகள் தூர் வாருதல் உள்ளிட்ட, பணிகள் நடந்து வருகின்றன.

இந்தப் பணிகளுக்கு அதிகபட்சமாக, 100 ரூபாய் கூலி நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.இந்தப் பணிக்கு, கடுமையான வேலைகள் இல்லை என்பதோடு, குறிப்பிட்ட நேரத்தில் வேலைகள் முடிக்கப்படுவதால், கிராமப் பகுதி மக்கள், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டப் பணிக்குச் செல்ல, அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.குறிப்பாக, பெண்கள் அதிக அளவில் இப்பணிக்குச் செல்வதால், கிராமப் பகுதிகளில், சிறு விவசாயிகள் நிலங்களைச் சீர் செய்தல், உழவுப் பணிகள், களை எடுத்தல், தண்ணீர் பாய்ச்சுதல், காய்கறி, வேளாண் பொருட்கள் அறுவடைப் பணி உள்ளிட்ட பணிக்கு, கூலி ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வேளாண் பணிகளைப் பொறுத்தவரையில், அறுவடைப் பணிக்கு குறிப்பிட்ட வேளாண் பொருட்கள் கூலியாகக் கொடுப்பதும், கிராமப் பகுதி வேளாண் பணிக்கு பெண்களுக்கு, 50 ரூபாய் முதல், 80 ரூபாய் வரை, குறைந்த வருவாய் கிடைப்பதால், பெரும்பாலான பெண்கள் ஆர்வம் காட்டுவதில்லை .

கிராமப் பகுதியில், வேளாண் பணிக்கு ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், சிறு விவசாயிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மூலம், விவசாயப் பணிகளை மேற்கொள்வதோடு, வேளாண் பொறியல் துறை மூலம், நவீன கருவிகளை வாடகைக்கு எடுத்து, பணிகளைச் செய்து வருகின்றனர்.

கூலி ஆட்களைப் பிடிக்க, முன் கூட்டியே கூலிக்குரிய பணத்தைக் கொடுத்து, ஆட்களை அழைத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சில விவசாயிகள் தங்கள் உறவினர்கள் மூலம், விவசாயப் பணிகளைச் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us