/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பூட்டிய வீடுகளுக்கு பாதுகாப்பு : கோவை மாநகர போலீசார் தீவிரம், தயங்காமல் தகவல் தர வேண்டுகோள்பூட்டிய வீடுகளுக்கு பாதுகாப்பு : கோவை மாநகர போலீசார் தீவிரம், தயங்காமல் தகவல் தர வேண்டுகோள்
பூட்டிய வீடுகளுக்கு பாதுகாப்பு : கோவை மாநகர போலீசார் தீவிரம், தயங்காமல் தகவல் தர வேண்டுகோள்
பூட்டிய வீடுகளுக்கு பாதுகாப்பு : கோவை மாநகர போலீசார் தீவிரம், தயங்காமல் தகவல் தர வேண்டுகோள்
பூட்டிய வீடுகளுக்கு பாதுகாப்பு : கோவை மாநகர போலீசார் தீவிரம், தயங்காமல் தகவல் தர வேண்டுகோள்
ADDED : ஜூலை 28, 2011 12:41 AM
கோவை : 'வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்வோர் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவித்தால், சிறப்பு கண்காணிப்பு மூலம் வீட்டுக்கு பாதுகாப்பளிக்க தயாராக உள்ளோம்.
குற்றத்தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்துள்ளனர் மாநகர போலீசார். கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சமீபகாலமாக வீடு புகுந்து திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான நகை, பணம் வீடுகளின் பூட்டை உடைத்து திருடப்பட்டுள்ளது. சமீபத்தில், கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து முந்திரி லோடு ஏற்றி வந்த லாரியை கோவை, வெள்ளலூர் பிரிவு அருகே வழிமறித்த கொள்ளையர், ஈரோட்டைச் சேர்ந்த டிரைவர் கருப்பையாவை அடித்து கொலை செய்து 45 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். அடுத்ததாக, சரவணம்பட்டி, அத்திபாளையம் பிரிவிலுள்ள சுகுணா 'லே-அவுட்' வீட்டில் தனியாக இருந்த பிளஸ் 2 முடித்த மாணவி திவ்யா (17) என்பவரை பட்டப்பகலில் கொலை செய்த கொள்ளையர் வீட்டிலிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். மக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்திய இவ்விரு வழக்குகளிலும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளை பிடிக்க தீவிர விசாரணை நடக்கும் அதே வேளையில், குற்றத்தடுப்பு நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டுமென்றும் போலீசார் வலியுறுத்தியுள்ளனர். வீட்டை பூட்டிவிட்டு பல நாட்கள் வெளியூர் செல்வோர், அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் தெரிவித்தால், அவ்வீடுகளுக்குரிய பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 'பூட்டிய வீடுகள்' பதிவேடு பராமரிப்பு: 'ஆளின்றி பூட்டியிருக்கும் வீடுகள் குறித்த பதிவேடு' கோவையிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் தோறும் பராமரிக்கப்படுகிறது. இரண்டு, மூன்று நாட்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்வோர், அது குறித்த விபரங்களை அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தெரிவித்தால் போலீசார் பதிவு செய்து அவ்வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. எனினும், வெளியூர் செல்லும் யாருமே அது குறித்த தகவலை போலீசுக்கு தெரிவிக்க தயங்குகின்றனர். போலீசுக்கு தெரிவித்தால், அந்த தகவல் எப்படியாவது 'கசிந்து' தங்களது வீட்டில் திருடர்கள் புகுந்துவிடுவார்களோ' என்ற சந்தேகம் கலந்த அச்சமும் மக்களுக்கு உள்ளது; இதன்காரணமாக யாருமே போலீசுக்கு தெரிவிப்பதில்லை. இதனால், பூட்டிய வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். கோவை மாநகர போலீஸ் கிழக்குப்பகுதி குற்றப்பிரிவு உதவிக் கமிஷனர் பாலாஜி சரவணன் கூறியதாவது: வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்வோர் சந்தேகம், தயக்கம் ஏதுமின்றி அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் தெரிவிக்கலாம். அவ்வாறு பெறப்படும் தகவல் போலீஸ் ஸ்டேஷனில் பராமரிக்கப்படும் பதிவேட்டில் குறிப்பிடப் பட்டு ரகசியமாக வைக்கப்படும். அந்த வீட்டுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். பகல், இரவில் வீடு அமைந்துள்ள பகுதிக்கு ரோந்து போலீசாரை அனுப்பி, சந்தேக நபர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படும். அவ்வாறில்லாமல் பல நாட்கள் வீடு பூட்டப்பட்டு, வாசலில் எடுக்கப்படாத பழைய நாளிதழ்களும், பால் பாக்கெட்களும் கிடக்கும்போது திருடர்கள் நோட்டமிட்டு திருட துணிகின்றனர். பூட்டப்பட்டிருக்கும் வீடுகள் குறித்த தகவல்கள் ஒருபோதும் குற்றவாளிகளுக்கு போகாது; அவ்வாறான சந்தேகம் தேவையற்றது. இரவு, பகல் பாராது பாதுகாப்பு பணியில் கவனம் செலுத்தி வரும் போலீசார் மீது சந்தேகம் கொள்வதை தவிர்க்க வேண்டும். குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களை தடுக்க முடியும். இவ்வாறு, பாலாஜி சரவணன் தெரிவித்தார்.


