PUBLISHED ON : ஆக 04, 2011 12:00 AM

தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு: சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என, ஐகோர்ட் தீர்ப்பு அளித்த பின், முதல் கட்டமாக ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்புகளில் நடைமுறைப்படுத்தினோம். இதில், அவசரம் என்பதற்கோ, தரம் இல்லை என்ற பேச்சுக்கோ, இடமே இல்லை.
டவுட் தனபாலு: அவசரமே படலைன்னா, முதல் வகுப்புக்கும், ஆறாம் வகுப்புக்கும் அறிமுகப்படுத்தினதுக்குப் பின்னாடி, இரண்டாம் வகுப்புக்கும், ஏழாம் வகுப்புக்கும் தானே அறிமுகப்படுத்தி இருக்கணும்... இப்படி ஒரேயடியா அத்தனை வகுப்புக்கும் அறிமுகப்படுத்தினா, அதுக்குப் பேரு அவசரம் இல்லையா...?
தமிழக காங்., தலைவர் தங்கபாலு: காங்கிரசின் பொதுக்குழு, நிர்வாகிகள் குழுவைக் கூட்டும் அதிகாரம், மாநிலத் தலைவருக்கு மட்டுமே உண்டு. ஆனால், தான்தோன்றித்தனமாக சிலர், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், பொதுக்குழு கூட்டம் என அறிவிப்பதும், கட்சிக்கு எதிரான கடும் நடவடிக்கை.
டவுட் தனபாலு: மத்தவங்களுக்கு அதிகாரம் இருக்கா, இல்லையாங்கிறது ஒரு பக்கம்... ஆனா, ராஜினாமா பண்ண ஒரு தலைவர், அதன் முடிவு என்ன ஆச்சுன்னு தெரியாத நிலையில், தனக்குப் பிடிக்காதவங்களை, கட்சியில இருந்து நீக்க அதிகாரம் இருக்கா...?
தி.மு.க., தலைவர் கருணாநிதி: மண்ணெண்ணெய் விலையை உயர்த்தியிருக்கின்றனர். ஜெ., ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் தானே ஆகிறது. அதற்குள் அவர்கள் செய்த சாதனைகளில் இதுவும் ஒன்று.
டவுட் தனபாலு: உங்க பெருந்தன்மைக்கு ஓர் அளவே இல்லையா...? ஒரே ஒரு முறை மண்ணெண்ணெய் விலையை உயர்த்தின அவங்க சாதனையை மட்டும் சொல்றீங்களே... மத்திய அமைச்சரவையில அங்கம் வசிச்சுட்டு, இத்தனை முறை பெட்ரோல், டீசல் விலை ஏத்தியும், ஒரு முறை கூட அந்தப் பெருமையை நீங்க எடுத்துக்கலையே...!


