PUBLISHED ON : ஆக 18, 2011 12:00 AM

தி.மு.க., தலைவர் கருணாநிதி: இவர்களுக்கு என்பதில்லை, பொதுவாகவே, மரண தண்டனை கூடாது என்ற கருத்தை நீண்டகாலமாக நான் வலியுறுத்தி வருகிறேன். அந்தக் கருத்து, ராஜிவ் கொலை வழக்கில் சிக்கியவர்களுக்கும் பொருந்தும்.
டவுட் தனபாலு: கைது பண்ணி, விசாரணை நடத்தி, குறுக்கு விசாரணை நடத்தி, தீர்ப்புல சொல்லப்படற மரண தண்டனை கூடாதுன்னு மட்டும் சொல்றீகளே... வெடிகுண்டு வெச்சு, கொத்து கொத்தா, நடக்கிற கொலை தண்டனை கூடாதுன்னு சொல்லவே மாட்டீங்களா?
தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்ட தீர்மானம்: வரும் 25ம் தேதி, சென்னையில், 'சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு' என்ற தலைப்பில், பொதுக் கூட்டம் நடத்துவது என்றும், அதில், தி.மு.க., தலைவர்
கருணாநிதி மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
டவுட் தனபாலு: இந்த பொதுக் கூட்டத்துல, அ.தி.மு.க., ஆட்சி வந்த பிறகு நடந்த விஷயங்கள் மட்டும் தான் சொல்லப்படுமா அல்லது தி.மு.க., ஆட்சியில நடந்த துகிலுரியும் திகில் காட்சிகளும் விளக்கப்படுமா?
காரைக்குடி போலீஸ் அதிகாரிகள் தகவல்: உள்துறை அமைச்சர் சிதம்பரம் வீட்டில் நடந்த கொள்ளை தொடர்பாக, மூன்று குற்றவாளிகளின் கைரேகைகள் சிக்கியுள்ளன; குறைந்தது, நான்கு நாட்கள் இந்த பங்களாவில் தங்கி கொள்ளையடித்துள்ளனர்.
டவுட் தனபாலு: இப்படி, 'ஹோம் மினிஸ்டர் ஹோம்'ல சாவகாசமா தங்கியிருந்து கொள்ளையடிச்சுருக்காங்களே, இது, நாட்டோட பாதுகாப்பு நிலைமைய காட்டுதா? இல்ல, இதையும் மாநில அரசின் சட்டம்-ஒழுங்கு பிரச்னைன்னு சொல்லப் போறாரா?


