Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்த "பாலிடிக்ஸ்'

கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்த "பாலிடிக்ஸ்'

கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்த "பாலிடிக்ஸ்'

கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்த "பாலிடிக்ஸ்'

ADDED : செப் 08, 2011 02:21 AM


Google News
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிய தாசில்தார் சிலர், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., தலையீட்டால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்று மாதமேயான நிலையில், மீண்டும் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இப்பிரச்னையை, வருவாய் நிர்வாக ஆணையத்துக்கு கொண்டு செல்லவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழக அரசுத்துறை அலுவலகங்களில், லஞ்சம் கொடுத்து பணியிடத்தை பெறுவது அல்லது பதவி உயர்வு, பழிவாங்கும் நடவடிக்கை போன்றவற்றால் அதிகாரிகள் இடமாறுதல் சம்பவங்கள் நிகழும். வருவாய்த்துறையானாலும், மற்ற துறைகளானாலும், சம்மந்தப்பட்டவர் மீது புகார், இல்லையெனில் அவரது சொந்த விருப்பம், நீண்ட காலம் பணியாற்றியது உள்ளிட்டவற்றை கொண்டு தான் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம்.சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அப்போதைய கலெக்டர் சந்திரகுமார், சென்னை வருவாய்த்துறை இணை இயக்குனராக மாறுதலாகி செல்வதற்கு முன், 22 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

புதிய கலெக்டராக பொறுப்பேற்ற மகரபூஷணம், இடமாற்றம் தொடர்பாக பெரியளவில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் எட்டு தாசில்தார்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். சேலம் சிரஸ்தாரராக இருந்த சித்ரா, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய சந்திரசேகர், சிரஸ்தாரர் இடத்தை மீண்டும் கைப்பற்றி உள்ளார். இடமாற்றம் செய்யப்பட்ட இருவரும், ஏற்கனவே வகித்த பதவிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.அதேபோன்று, முத்திரை கட்டண தாசில்தார் சுரேஷ், கனிமவளத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆத்தூரில் பணியாற்றிய கிருஷ்ணப்பா, முத்திரை கட்டணத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய ராஜன், இடைப்பாடி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சில தாசில்தார்கள் புதிய இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.பணியிடத்தில் சேர்ந்து மூன்று மாதங்கள் முழுமையாகக்கூட, நிறைவடையாத நிலையில், இடமாற்றம் செய்தது அவர்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது. சேலம் மேற்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வெங்கடாசலம் தலையீடு, இந்த இடமாற்றத்தில் அதிகப்படியாக இருந்ததாக கூறப்படுகிறது. எம்.எல்.ஏ.,வுக்கு, கிருஷ்ணப்பா மிகவும் நெருக்கமானவர் என்றும், அதனால் உள்ளூர் மந்திரி மூலம், சேலம் முத்திரை கட்டண தாசில்தார் பதவியை, கிருஷ்ணப்பாவுக்கு வாங்கி கொடுத்துள்ளதாகவும், மேலும் சில தாசில்தார் மாற்றத்துக்கும் அவர் உதவியதாக, அதிகாரிகள் மட்டத்தில் பரபப்பாக பேசப்படுகிறது.

சிரஸ்தாரர் பணியில் திருப்தி இல்லாததால், தாசில்தார் சித்ராவை பழைய பணியிடத்துக்கே கலெக்டர் மாற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது. வருவாய்த்துறையை பொறுத்தமட்டில், அனைத்து துறையிலும் பணியாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தான் இடமாற்றம் செய்யப்படுகிறது. ஆனால், சிரஸ்தாரருக்கு புதியவரை நியமிக்காமல், இரண்டு ஆண்டுகளாக பணியாற்றிய சந்திரசேகரையே மீண்டும் நியமித்துள்ளது, மற்ற அதிகாரிகளிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.சேலம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கூறியதாவது:தாசில்தார்கள் இடமாற்றம் குறித்து, வருவாய்த்துறை அலுவலர் சங்கத்துக்கு மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவிப்பதில்லை. இரவோடு இரவாக தாசில்தார், 8 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசியல் தலையீடு இதில் நிகழ்ந்துள்ளது. மூன்று மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், மீண்டும் பணியிட மாற்றம் செய்தால், புதியவர்கள் அந்த பணியை எவ்வாறு மேற்கொள்ள முடியும். அவர்களிடத்தில், பணிமாற்றம் குறித்து மற்ற அதிகாரிகள் கேலியாக பேசும் நிலை உருவாகும். இந்த மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என, கலெக்டரை வலியுறுத்த உள்ளோம். வருவாய் நிர்வாக ஆணையத்துக்கும், இது குறித்து தகவல் அளிக்க உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் கூறியதாவது:நிர்வாக காரணங்களுக்காக தான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசியல் தலையீடு எல்லாம் கிடையாது. நாளைக்கே, அரசு என்னை இடமாற்றம் செய்தால், அது அரசியல் தலையீடு ஆகுமா? சொல்பவர்கள் ஏதாவது சொல்வார்கள். சிரஸ்தாரர் பதவியில் வேகமாக பணியாற்ற ஒருவர் வேண்டும் என்பதற்காக தான் மாற்றமே தவிர, பழிவாங்கும் நடவடிக்கை எல்லாம் கிடையாது என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us