Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/போக்குவரத்து காப்பாளர் பணிவிண்ணப்பிக்க அழைப்பு

போக்குவரத்து காப்பாளர் பணிவிண்ணப்பிக்க அழைப்பு

போக்குவரத்து காப்பாளர் பணிவிண்ணப்பிக்க அழைப்பு

போக்குவரத்து காப்பாளர் பணிவிண்ணப்பிக்க அழைப்பு

ADDED : செப் 09, 2011 01:12 AM


Google News
சேலம்: சேலம் மாநகரில், புதிதாக துவங்கப்பட்டுள்ள போக்குவரத்து காப்பாளர் பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, கமிஷனர் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் விடுத்துள்ள அறிக்கை:தொழில்துறை வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, சேலம் மாநகரில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. இதை சமாளிக்கவும், சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் போக்குவரத்து காப்பாளர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து காப்பாளர் அமைப்பு, அரசால் நிறுவப்பட்ட, போலீஸுடன் இணைந்து சேவையாற்றும் லாப நோக்கமில்லாத தன்னார்வ அமைப்பாகும்.இந்த அமைப்பில் சேர விரும்புபவர்கள், 25ல் இருந்து 45 வயதிற்குள் இருப்பின் வாரம் சில மணி நேரம், சேலம் மக்களுக்காகச் செலவிட முடியும் என்றால், இந்த அமைப்பில் சேர்ந்து சேவை புரிய அரிய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.இந்த அமைப்பில் சேர்பவர்கள், போலீஸின் உடை அணிந்து பெருமையாகச் சேவை செய்யலாம். போலீஸுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புப் பெறலாம். குறிப்பிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசலை, வாரம் இருமுறை (நான்கு மணி நேரம்) சீர் செய்யலாம்.

மாநகர போக்குவரத்து நெரிசலை குறைக்க நேரடியாக உதவலாம். ரோடுகளில் பொறுப்பாக வாகனங்களைச் செலுத்த, மக்களுக்கு வழிகாட்டலாம். பள்ளி, கல்லூரி மாணவர்களை சாலை பாதுகாப்புப் படையில் சேர்த்து பயிற்சி அளிக்கலாம்.வாகன ஓட்டுனர்களிடையே சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். பொதுத்துறைகளின் ஆக்கபூர்வ நடவடிக்கைகளையும் தெரிந்து கொள்ளலாம். இந்த அமைப்பில் சேர்வதன் மூலம் பல உயிர்களை நீங்கள் காப்பாற்ற முடியும். இதில், சேர்பவர்களுக்கு முழுமையான பயிற்சி வழங்கப்பட்டு, அடையாள அட்டையும் வழங்கப்படும்.

இதில், சேர விரும்புபவர்கள் இந்திய குடிமகனாகவும், சேலத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் தெரிந்து இருக்க வேண்டும். நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும். சீருடை அதைச் சார்ந்த பொருட்களை சொந்த செலவில் வாங்கிக் கொள்ள வேண்டும். குற்றப் பின்னணி இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள், சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: போலீஸ் கமிஷனர், கமிஷனர் அலுவலகம், லைன்மேடு, சேலம் -6.

மேலும் விபரங்கள் தேவைப்படுபவர்கள், போலீஸ் உதவி கமிஷனர், போக்குவரத்து பிரிவு, சேலம் மாநகரம், 0427 - 2222887, 98409 26455 என்ற ஃபோன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us