தேர்தல் விதி மீறி உணவு வழங்கியவர்களை பிடிக்க சென்ற போலீசார் சுற்றி வளைப்பு
தேர்தல் விதி மீறி உணவு வழங்கியவர்களை பிடிக்க சென்ற போலீசார் சுற்றி வளைப்பு
தேர்தல் விதி மீறி உணவு வழங்கியவர்களை பிடிக்க சென்ற போலீசார் சுற்றி வளைப்பு

மேலூர் : வேட்பு மனுத் தாக்கலின் கடைசி நாளான நேற்று, மதுரை மாவட்டம் மேலூரின் பல்வேறு பகுதிகளில் உணவு சப்ளை நடை பெற்றது.
மேலூர் தெற்குதெரு ஊராட்சி தலைவருக்கு தி.மு.க.,வைச் சேர்ந்த போஸ் நேற்று மனுத் தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து நான்கு வழிச்சாலையின் மேற்புறம் உள்ள ஒரு வீட்டில், உடன் வந்தவர்களுக்கு வழங்குவதற்காக மட்டன் பிரியாணி ஆயிரம் பாக்கெட் வைக்கப்பட்டிருந்தது.
இன்ஸ்பெக்டர் மாடசாமி, பொட்டலங்களை பறிமுதல் செய்து, உணவு வழங்கிய ஏழு பேரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார். வழியில் சென்று கொண்டிருந்தபோது முனிக்கோயில் அருகே ஒரு ஆட்டோ நிறைய சிக்கன் பிரியாணி பொட்டலங்கள் வரவே, வழிமறித்து அதையும் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தார்.
கச்சிராயன்பட்டி ஊராட்சியில், மாணிக்கம் என்பவர் சார்பில் உணவு வழங்க தயார் நிலையில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ஒரு எஸ்.ஐ.,யுடன் அங்கு சென்றபோது, முட்டை பிரியாணி பொட்டலங்கள் போடப்பட்டிருந்தது.
மேலும், முட்டைகள் அடுப்பில் வெந்து கொண்டிருந்தது. அனைத்தையும் அள்ளி இன்ஸ்பெக்டர் வேனில் கொட்ட, வேட்பு மனுத் தாக்கல் முடிந்து வந்த கூட்டம், அந்த தோப்பிற்குள் நுழைந்தது. மது போதையில் இருந்த சிலர் உணவை போலீசார் எடுத்துச் செல்வதை கண்டதும், ஆத்திரத்துடன் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர்.
போலீசாரை தள்ளிவிட்டு, பொட்டலங்களை எடுத்துக் கொண்டு பொதுமக்கள் ஓடிவிட்டனர். விதிகளை மீறி உணவு வழங்கியதாக 20க்கும் மேற்பட்டவர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.