ஊழலை ஒழிக்க மின்னணு நிர்வாகம் அவசியம் : சொல்கிறார் அமைச்சர் கபில் சிபல்
ஊழலை ஒழிக்க மின்னணு நிர்வாகம் அவசியம் : சொல்கிறார் அமைச்சர் கபில் சிபல்
ஊழலை ஒழிக்க மின்னணு நிர்வாகம் அவசியம் : சொல்கிறார் அமைச்சர் கபில் சிபல்
ADDED : செப் 30, 2011 12:35 AM

புதுடில்லி : ''இந்தியாவில் அரசுப் பணிகளில் மின்னணு நிர்வாகம் அவசியமானது.
இதன்மூலம், தனி நபர்களின் தலையீடு குறைந்து பொதுமக்களுக்கான சேவை எளிதில் சென்றடையும். ஊழலையும் ஒழிக்க முடியும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
டில்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கபில்சிபல் கூறியதாவது: பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய அரசின் சேவைகள், மனிதர்களின் குறுக்கீட்டால் தாமதமாகிறது. இவற்றை சட்டத்தால் மட்டும் தடுத்து நிறுத்த முடியாது. மின்னணு நிர்வாகத்தை அமல்படுத்துவதன் மூலம் மனித தலையீட்டை தடுத்து நிறுத்த முடியும். இதற்கு என்னால் ஒரு உதாரணத்தை சொல்ல முடியும்.
முன்பெல்லாம், கூடுதலாக கட்டிய வருமான வரியை திரும்பபெறுவது (ரீபண்ட்) என்றால், 'எங்களுக்கு குறிப்பிட்ட சதவீதத்தை கொடுங்கள் உங்களுக்கு பணம் திரும்ப கிடைக்கும்' என, அதிகாரிகள் சொன்ன காலம் இருந்தது. தற்போது இது மாறியுள்ளது.
வருமான வரி செலுத்துவது மற்றும் கூடுதலாக செலுத்திய வரியை திரும்ப பெறுவது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் கம்ப்யூட்டர் மயமாக்கிய பிறகு நிலைமையே மாறியுள்ளது.
கூடுதலாக வரி கட்டிய சந்தாதாரருக்கு, அவருடைய வங்கி கணக்கிலேயே , நேரிடையாக வரவு வைக்கப்படுகிறது. இதனால், மனித தவறுகளுக்கு இடம் இல்லாமல் போய்விட்டது.
மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகம், சேவைப் பணிகளை மின்னணு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக மசோதாவை தயாரித்து வருகிறது. இது, பார்லிமென்டின் அடுத்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும். இந்த மசோதா நிறைவேறியதும், அரசுத் துறையில் பொதுசேவையாற்றக்கூடிய அனைத்து துறைகளும், ஐந்தாண்டுக்குள் மின்னணு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் வகையில் சட்டமாக்கப்படும். இவ்வாறு கபில் சிபல் கூறினார்.