Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறை

அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறை

அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறை

அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறை

ADDED : அக் 14, 2011 12:24 AM


Google News
திருப்பூர் : உள்ளாட்சி தேர்தல் பரபரப்பை பயன்படுத்திக்கொண்டு, பிச்சம்பாளையம் மற்றும் மங்கலம் சுற்றுப்பகுதிகளில் சாயப் பட்டறைகள் முறைகேடாக இயங்குவது அதிகரித்துள்ளது.'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் செயல்படுத்தாத காரணத்தால், கோர்ட் நடவடிக்கைக்கு உள்ளாகி, திருப்பூரில் சாய சலவை ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

இருப்பினும், ஒரத்துப்பாளையம் அணையிலும், நொய்யல் ஆற்றிலும் அதிக டி.டி.எஸ்., திறனுள்ள கழிவுநீர் செல்வதாக விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு குடியிருப்புகளுக்கு மத்தியிலும், நடமாட்டம் குறைவான பகுதிகளிலும், முறைகேடான சாயப் பட்டறைகள் இயங்குவதே காரணம். சாய சலவை ஆலைகள் மூடப்பட்டதால், முறைகேடான பட்டறைகளுக்கு கிராக்கி ஏற்பட்டது. இங்கு, வழக்கத்தை காட்டிலும் குறைந்த கட்டணத்தில் துணிகளுக்கு சாயமிட்டு கொடுப்பதால், சிறு, குறு உற்பத்தியாளர்கள் பயனடைகின்றனர். எவ்வகையான சுத்திகரிப்பும் இல்லாமல், கழிவுநீரை நொய்யலில் கலப்பதால், சுற்றுச்சூழல் மாசுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தாலும், அவர்களுக்கு போக்குகாட்டி விட்டு, மூலை முடுக்கெல்லாம் பட்டறைகள் இயங்குவது தொடர் கிறது. திருப்பூர் இரட்டை கண் பாலம், ஓம்சக்தி கோவில் வீதி, எஸ்.வி., காலனி பகுதிகள், லட்சுமி நகர் விரிவு பகுதிகள், மங்கலம், வஞ்சிபாளையம், வேட்டுவபாளையம் சுற்றுப்பகுதிகள், பிச்சம்பாளையம், கேத்தம்பாளையம், போயம்பாளையம் பகுதிகளிலும் முறைகேடான பட்டறைகள் இயங்குகின்றன.பிச்சம்பாளையம் பகுதியில் சாயக்கழிவு நீர் வெளியேறுவதை கண்டுபிடித்த பொதுமக்கள், நேரடியாக சம்பந்தப்பட்ட பட்டறைக்கு சென்று எச்சரித்துள்ளனர். அதன்பின், பனியன் துணிகளுக்கு சாயமிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் சாயமிட மாட்டார்கள் என்பதை உறுதியாக கூற முடியாது என்பதால், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us