தேவகவுடா மகன் வீடு, ஆபீசில் லோக் ஆயுக்தாவினர் சோதனை
தேவகவுடா மகன் வீடு, ஆபீசில் லோக் ஆயுக்தாவினர் சோதனை
தேவகவுடா மகன் வீடு, ஆபீசில் லோக் ஆயுக்தாவினர் சோதனை
ADDED : அக் 14, 2011 10:51 PM

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன் பாலகிருஷ்ண கவுடாவின் வீடு, அலுவலகங்களில், ஒரே நேரத்தில் லோக் ஆயுக்தாவினர் சோதனை நடத்தினர். கே.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் பாலகிருஷ்ண கவுடா, விருப்ப ஓய்வு பெற்ற போது, பத்து கோடி ரூபாய் சொத்து இருப்பதாக அறிவித்திருந்தார். ஓய்வு பெற்ற ஐந்தாறு ஆண்டுகளில், 500 கோடி ரூபாய் சொத்துகள் குவித்துள்ளார். இது குறித்து, விசாரணை நடத்தக் கோரி, லோக் ஆயுக்தா சிறப்பு கோர்ட்டில், பத்ராவதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணா புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, லோக் ஆயுக்தா சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த 10ம் தேதி, பாலகிருஷ்ண கவுடாவின் சட்ட விரோத சொத்து குறித்த அறிக்கையை அளிக்காததால், லோக் ஆயுக்தா விசாரணை அதிகாரிகளிடம், லோக் ஆயுக்தா கோர்ட் நீதிபதி சுதீந்திரராவ், கேள்வி எழுப்பினார். இம்மாதம் 22ம் தேதி வரை, கால அவகாசம் பெற்று கொண்ட விசாரணை அதிகாரி பிரசன்னா வி.ராஜு தலைமையில் ஒரே நேரத்தில் நேற்று பெங்களூரு, மைசூரில் சோதனை நடந்தது.
பாலகிருஷ்ண கவுடாவின், பெங்களூரு பத்மநாபநகரிலுள்ள மூன்று அடுக்கு கொண்ட ஆடம்பர பங்களா, அன்னபூரனேஸ்வரி வீடு, விஜயநகரிலுள்ள வீடு, மைசூரில் மைத்துனி வீடு, கனகபுரா ரோடு ஜெயநகர், திலக்நகர், பத்மநாபநகரிலுள்ள அலுவலகங்களில், நேற்று அதிகாலையிலிருந்தே லோக் ஆயுக்தாவினர் சோதனை நடத்தினர்.
இச்சோதனையின் போது, பாலகிருஷ்ண கவுடா, வருமானத்தை மீறி சேர்த்துள்ள, சொத்து குறித்த பதிவு பத்திரங்களை கைப்பற்றினர். ஆடம்பர பொருட்களை லோக் ஆயுக்தாவினர் கணக்கிட்டு வருகின்றனர். இச்சோதனை பற்றி அறிந்திருந்த பாலகிருஷ்ண கவுடா, ஆதாரங்கள் எதுவும் கிடைக்காத வகையில் ஒழித்து வைத்துள்ளதாக தெரிகிறது. சட்ட விரோத சொத்து சேர்ப்பு பெருமளவில் உள்ளதாக வங்கி கணக்குகள், கைப்பற்றப்பட்ட பத்திரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. லோக் ஆயுக்தா, ஏழு இடங்களில் சோதனை நடத்தியிருப்பதுடன், மனைவி, உறவினர்களின் பெயரில் உள்ள சொத்துகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.


