மில் தொழிலாளர் போனஸ் பேச்சு துவக்கம்
மில் தொழிலாளர் போனஸ் பேச்சு துவக்கம்
மில் தொழிலாளர் போனஸ் பேச்சு துவக்கம்
ADDED : அக் 12, 2011 12:17 AM
கோவை:கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், மில் தொழிலாளர் போனஸ் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், சிறியதும், பெரியதுமாக ஆயிரம் மில்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர் வேலை பார்த்து வருகின்றனர்.தீபாவளியை முன்னிட்டு, மில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய போனஸ் தொடர்பாக, ஒரு மாதம் முன்னரே தொழிற்சங்கத்தினர் சார்பில் அந்தந்த மில்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில், மில் அதிபர்களுக்கும், தென்னிந்திய மில்கள் சங்கத்தினருக்கும் அனுப்பி வைக்கப்பட்ட அந்த கடிதத்தில், '6,600 கதிர்கள் வரை இயங்கும் மில்களில் பணிபுரியும் நிரந்தரம், பதிலி, தற்காலிகம், தினக்கூலி, கேம்ப் கூலி என அனைத்து வகை தொழிலாளர்களுக்கும், அவர்கள் ஈட்டிய சம்பளத்தில் 35 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்' என்று கோரியிருந்தனர்.'கோரிக்கை தொடர்பாக, அக்.,5ம் தேதிக்குள் தொழிற்சங்கங்களுடன் பேசி, போனஸ் பட்டுவாடா செய்ய வேண்டும்' என்றும், 'அக்.,5க்குள் உடன்பாடு காண முடியாத மில்களில், நேரடிப்போராட்டங்களில் ஈடுபடுவது குறித்து கூட்டுக்குழு கூடி முடிவு செய்யும்' என்றும் கடிதத்தில் தெரிவித்திருந்தனர்.அதன் அடிப்படையில், பெரும்பாலான மில்களில், நிர்வாகத்தினர், தொழிற்சங்கத்தினர் இடையே போனஸ் பேச்சு துவங்கியுள்ளது. மில் அதிபர்கள் தரப்பில், 'நூல் விலை குறிப்பிடும்படியாக உயரவில்லை. பஞ்சு விலை ஏறி இறங்குவதால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. மின் தட்டுப்பாடு பிரச்னையும் மில்களின் லாபத்தை கடுமையாக பாதிக்கிறது' என்று, தெரிவித்தனர்.தொழிற்சங்கத்தினர் தரப்பில், 'கடந்த போனஸ் ஆண்டில், ஓரிரு மாதங்கள் மட்டும் தான் மின் தட்டுப்பாடு இருந்தது. ஒன்பது முதல் பத்து மாதங்கள் வரை, மின் வினியோகம் நல்ல நிலையில் தான் இருந்தது. அந்த காலகட்டத்தில் மில்கள் நல்ல லாபம் சம்பாதித்துள்ளன. அதற்கேற்ப போனஸ் வழங்க வேண்டும்' என்று வலியுறுத்தினர்.
'பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. தீபாவளிக்குள் பெரும்பாலான மில்களில் உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது' என்று, தொழிற்சங்க நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.இதேபோல, தேசிய பஞ்சாலை கழகத்துக்கு (என்.டி.சி.,) சொந்தமான ஏழு மில்களில் வேலை பார்க்கும் 4,000 தொழிலாளர்களுக்கான போனஸ் பேச்சுவார்த்தையும் துவங்கியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட நான்கு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளும், என்.டி.சி., அதிகாரிகளும் முதல் கட்ட பேச்சு நடத்தியுள்ளனர்.


