Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/"சீட்' கிடைக்காத வட்டச் செயலாளர்களால்... மதுரை மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர்கள் கலக்கம்

"சீட்' கிடைக்காத வட்டச் செயலாளர்களால்... மதுரை மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர்கள் கலக்கம்

"சீட்' கிடைக்காத வட்டச் செயலாளர்களால்... மதுரை மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர்கள் கலக்கம்

"சீட்' கிடைக்காத வட்டச் செயலாளர்களால்... மதுரை மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர்கள் கலக்கம்

UPDATED : அக் 07, 2011 10:58 PMADDED : அக் 07, 2011 10:02 PM


Google News
மதுரை மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர்கள் பலர், 'சீட்' கிடைக்காத வட்ட செயலாளர்களின் 'உள்குத்து' வேலைகளால் கலக்கம் அடைந்து உள்ளனர்.

தலைமை தரும் பணம் எங்கே 'சுருட்டப்பட்டுவிடுமோ' என்ற பயமும் ஒரு காரணம். எப்போதும் இல்லாத அளவில், இத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகள் தனித்து போட்டியிட்டு

தங்களின் உண்மையான 'மெஜாரிட்டியை' காண்பிக்க காத்திருக்கின்றன. இவர்களை நம்பி ஏமாந்த தே.மு.தி.க., இடதுசாரி கட்சிகள் தங்கள் பங்குக்கு கூட்டணி அமைத்து மோதிக் கொண்டதுதான் மிச்சம்.

மதுரையில் பெரும்பாலும் வட்டச்செயலாளர்களுக்குதான் 'சீட்' கொடுக்கப்பட்டுள்ளது. இதையும்மீறி 'சிபாரிசு' அடிப்படையில், அந்தந்த பகுதி வட்ட பிரதிநிதிகள், கட்சி பொறுப்புகளில் உள்ளவர்கள் வேட்பாளராக போட்டியிடுகின்றனர். தி.மு.க.,வில் ஜாதி, கட்சி பதவி, பொருளாதார பின்னணி அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.,வில் கட்சி பதவி, சிபாரிசு, ஜாதியை கணக்கிட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இதிலும் 'சிபாரிசு' பலமாக இருந்ததால் மூன்று முறை வேட்பாளர் பட்டியல் திருத்தப்பட்டது. தே.மு.தி.க.,வில் பொருளாதாரம், ஜாதி அடிப்படையில் 84 வார்டுகளில் வேட்பாளர்கள் நிறுத்தபட்டுள்ளனர்.இந்த தேர்தல் 'சுனாமி'யில் 'சீட்' கிடைக்காத வட்ட செயலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். தலைமையை பகைத்துக் கொண்டால் கட்சியில் தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என பயந்து, வேறுவழியின்றி 'போடுங்கம்மா ஓட்டு...' என்று கோஷம் போடாத குறையாக வேட்பாளர்களுடன் 'டம்மி பீஸாக' சென்று வருகின்றனர்.

விசுவாசம் காரணமாக தேடி வந்த 'சீட்'டை மறுக்க முடியாத சில வறுமையான வேட்பாளர்கள், தொழிலதிபர்கள், வி.ஐ.பி.,க்களிடம் தீபாவளி 'இனாம்' பெற்று செலவழிக்கின்றனர். இவர்களுக்கு வட்ட செயலாளர்களிடமிருந்து எந்த உதவியும் கிடைப்பதில்லை. தெருக்களுக்கு வேட்பாளர் செல்லும்போது, அந்த தெருவில் நன்கு அறிமுகமான தனது விசுவாசியை, வேட்பாளருடன் செல்லக்கூடாது என வட்டசெயலாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுபோன்று 'உள்குத்து' வேலைகளால் வேட்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். மேலும், கட்சி தரும் பணம் வட்ட செயலாளர் மூலம் தரப்படும்பட்சத்தில், எங்கே சுருட்டப்பட்டுவிடுமோ என்ற பீதியும் வேட்பாளர்கள் மத்தியில் நிலவுகிறது.

- நமது சிறப்பு நிருபர் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us