
மெட்ரிக் பள்ளிகளில் தமிழ்ப் பாடம் உள்ளதா?சு.லட்சுமணன், (மாவட்ட கல்வி அலுவலர், பணி ஓய்வு), பீர்க்கன்காரணை, சென்னையிலிருந்து எழுதுகிறார்: அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்து பள்ளிகளும் சமச்சீர் கல்வியை, 2011-12ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஐகோர்ட் தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்று, அனைத்து பள்ளிகளுக்கும், சமச்சீர் கல்வி பாட நூல்களை வழங்கி விட்டது.
கூடங்குளம்அணுமின் நிலையம்மூடலாமா?கி.ஆளவந்தார், சென்னையிலிருந்து எழுதுகிறார்: நம் படிம எரிபொருட்களின் கையிருப்பு, 50 ஆண்டுகளுக்கு மேல் தாண்டாது. நம்மிடம் இருக்கும் நிலக்கரி, 30 ஆண்டுகள் மட்டுமே கிடைக்கும். புதிதாக புனல் மின் நிலையங்களை நிர்மாணிக்கலாம் என்றால், அதிக வாய்ப்பில்லை. படிம எரிபொருட்களைப் பயன்படுத்தினால், சுற்றுச்சூழல் மாசு படும். கடல் அலை, காற்றாலை, சூரியசக்தி மூலம், பெரிய அளவில் மின் உற்பத்தி செய்ய நெடுங்காலமாகும். இச்சூழ்நிலையில், அணுமின் சக்தி முக்கியமானது.மத்திய அரசின் கடல் மற்றும் மீன்வள ஆய்வு மையம், தன் ஆய்வில், 1994-98ம் ஆண்டுகள் வரை, கல்பாக்கம் பகுதியில் மீன் பிடிப்பு பாதிக்கப்படவில்லை என கண்டுள்ளது. அணு உலையிலிருந்து வெளியேறும் வெப்ப நீர், 500 மீட்டர்கள் தொலைவு மட்டுமே, கடல் நீரை பாதிக்கும்.அணு உலையால் ஏற்படும் கதிர்வீச்சு மிகக் குறைவு. அதனால், கேன்சர் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை. சுனாமியும், நிலநடுக்கமும் ஒருசேரத் தாக்கும் பிரதேசத்தில், இந்திய அணு உலைகள் கட்டப்படவில்லை. அதனால், ஜப்பானில் ஏற்பட்ட விபத்தைப் போன்று, இந்தியாவில் நிகழும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.உலகளவில், உற்பத்தியாகும் மின் சக்தியில், அணுமின் சக்தியின் பங்கு, 16 விழுக்காடு. இது இந்தியாவில், 3 சதவீதத்திற்கும் குறைவு. இந்நிலையில், நாம் அணு உலையில் போதிய பாதுகாப்பை கோருவது நியாயமே; ஆனால், கூடங்குளம் அணு உலையை மூடுவது தீர்வாகாது.
கட்சியைமுதலில்வளர்க்கட்டும்!திருமலை ராஜன், ராஜகீழ்ப்பாக்கம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: எல்லாரும் நெல் உலர்த்தினால், எலி தன் வாலை உலர்த்தியதாம் என்ற கதையாக, ஓரளவு செல்வாக்குள்ள கட்சிகளே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட குழம்பிக்கொண்டிருக்கின்றன.இவ்வேளையில், பெரும் பகுதி நேரத்தை பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டங்களிலேயே செலவழித்துக் கொண்டிருக்கிறது தமிழக பா.ஜ., சென்னை மேயர் தேர்தலில் நிற்க, தமிழிசை சவுந்தர ராஜன் மற்றும் வானதிசீனிவாசனிடையே போட்டி என்ற செய்தி, தற்பேதைய நிலையில், வேடிக்கையாகத்தான் இருக்கிறது.காரணம், ஓரளவு பரிச்சயமுள்ள இவர்கள் இருவருமே, கடந்த சட்டசபைத்தேர்தலில், குறைந்தளவு ஓட்டுகளை பெற்று, தோல்வியையே தழுவினர். ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலையில், 200 வார்டுகளில் ஓட்டுகளைப் பெற்று ஜெயிப்பது நடவாத ஒன்று.மக்களின் ஆதரவைப் பெறும் விதத்தில், முதலில் கட்சியை வளர்த்துவிட்டு, அதன் பின், தேர்தல் குறித்து நினைப்பதே பா.ஜ.,விற்கு நல்லது.
கருணாநிதியின் முரண்பட்ட கருத்து...:அ.ஜெயபாலன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: சமீபகாலமாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்து வரும் கருத்துக்கள், குழப்பத்தைத் தோற்றுவிக்கும் வகையில் உள்ளன. கடந்த மூன்று வாரங்களுக்கு முன், அவர் வெளியிட்ட அறிக் கையில், 'காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடரும்' என, அறிவித்திருந்தார். ஆனால் தற்போது, தி.மு.க., தனித்து போட்டி என அறிவித்து, அதற்கான புதிய கண்டுபிடிப்பை, தன் சித்தாந்தமாக தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலின் போதும், சட்டசபை தேர்தலின் போதும் தான், காங்கிரசின் உறவு தேவைப்படும். அப்போதெல்லாம், எங்களின் உறவு முறியாது நீடிக்கும். உள்ளாட்சித் தேர்தலில், உள்ளாட்சி அமைப்பு என்பது, மக்களின் அடிப்படைத் தேவைகளை முன் வைத்து, பணிகள் ஆற்றக் கூடியதாக உள்ளதால், இதில் அரசியல் கலக்க தேவையில்லை என்ற முடிவை, தான் மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக, 2006ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அப்படியிருக்க, தற்போது அவர் தெரிவித்துள்ள இப்புதிய கருத்து, அன்றே அவருக்குத் தெரியாமல் போனது ஏன் என்பது, புரியாத புதிராக உள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பே, தமிழக காங்கிரசாரிடையே. தி.மு.க., கூட்டணிக்கு எதிர்ப்பு எழுந்த போதும், ஒற்றுமை, பரஸ்பர உணர்வு இல்லாத நிலையில், காங்கிரசின் அகில இந்திய தலைமையின் மூலம், கூட்டணியை தொடர கடும் சிரத்தை மேற்கொண்டார் கருணாநிதி.ஆனால், தற்போது உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரசின் ஆதரவு தேவையில்லை என முடிவு செய்து, அதற்கு ஒரு புதிய காரணத்தைக் கண்டறிந்து வெளிப்படுத்தியிருப்பது, முன்னுக்குப் பின் முரணாக இருப்பது, உள்ளங்கை நெல்லிக்கனியாக அனைவருக்கும் தோன்றுகிறது.
எப்படி ஐயா கடன் கட்டுவது?ஏ.எம்.கண்ணுச்சாமி, முத்தூரிலிருந்து எழுதுகிறார்: கடந்த 10 ஆண்டுகளில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் கடன் பிரச்னையால், தற்கொலை செய்து கொண்டனர் என, பல புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.தினமும் ஏதேனும் ஒரு கிராமத்தில் கந்து வட்டி, வங்கிக்கடன் போன்ற காரணங்களால், ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டது செய்தியாக வருகிறது.வெங்காயம் விற்றால், ஒரு லட்ச ரூபாய் லாபம் வரும்; கடனை கட்டலாம்; பிள்ளைகளை படிக்க வைக்கலாம்; திருமணம்செய்யலாம் என ஆசைப்படுவதற்குள், வெங்காய ஏற்றுமதிக்கு தடை என்று வந்துவிட்டது.கொஞ்சம் விலை ஏறினாலும், இறக்குமதி செய்து விடுகிறது அரசு. உரம் விலை உயரலாம், டீசல் விலை உயரலாம். இதெல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அந்தந்த நிறுவனங்களே விலையை உயர்த்திக் கொள்ளலாம். ஆனால், விவசாயப் பொருட்களின் விலை உயர்வை மட்டும் அரசு கட்டுப்படுத்தும்... இது என்ன நியாயம்?லாபமே இல்லாத தொழிலைச் செய்து, எப்படி கடன் கட்டுவது?இந்த மாதிரியான, மோசமான பொருளாதார கொள்கையை வைத்திருக்கும் அரசு இருக்கும் வரை, தற்கொலை எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கும். இந்நிலையில், தன் சொந்த பிள்ளைகளை காவு கொடுத்துவிட்டு, வைகோ போன்றோர், ஊரான்பிள்ளைக்காக கூட்டம் கூட்டி நியாயம் கேட்பது, வேடிக்கையாய் உள்ளது.
எங்கே இருக்கு14 பைசா?வீ.சுந்தர மகாலிங்கம், திருவனந்தபுரத்திலிருந்து எழுதுகிறார்: இப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு, 3.14 ரூபாய் கூட்டப்பட்டுள் ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 70.82 ரூபாய் என உயர்த்தி விற்கப்படுகிறது. இந்த விலையை, இன்னும் பைசா கணக்கில் துல்லியமாக நிர்ணயம் செய்வது, வழக்கமாக இருக்கிறது. பைசாக்களில், 1 முதல் 25 வரை பல ஆண்டுகளாகப் புழக்கத்தில் இல்லை என்பதும், நுகர்வோர் பைசா கணக்கில் கொடுக்க முடியாது என்பதும், விலையை நிர்ணயம் செய்யும் கம்பெனிகளுக்கும், அரசுக்கும் தெரியாதா?இவ்வாறு பைசாக்களை சேர்த்து பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பது நடைமுறைக்கு உதவாது. பைசா கணக்கில் கொடுக்கவும், பாக்கி வாங்கவும் முடியாது. வாகன ஓட்டுனர்கள் மீதிப் பணம் குறைவாக இருந்தால், அதை டீலரிடம் வாங்க முடியாம, ஊழியருக்கு, 'டிப்ஸ்' கொடுத்து விட்டுப் போவதும் சகஜம். இதனால், டீலர்களுக்கு இந்தப் பணம் ஆயிரக்கணக்கில் சேர்ந்துவிடும்.இந்தியா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான டீலர்களுக்கு, லட்சக்கணக்கில், கோடியில் போய்ச்சேரும். இதனால், கம்பெனிகளுக்கும் லாபமில்லை, நுகர்வோருக்கும் பிரயோஜனமில்லை. எனவே, இந்த விலையை, 50 பைசாவுக்குக் குறைவாக இருந்தால், தள்ளுபடி செய்தும், அதற்கு மேல் இருந்தால், ஒரு ரூபாயாக கூட்டியும் நிர்ணயிக்கலாம். இந்த முறை தான் எளிதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.இனிமேலாவது, இது பற்றிச் சிந்தித்துச் செயல்படவேண்டும்.
மோடி ஸ்டைல்அபாரம்!பா.பாரதியன்பன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'குஜராத்தில் அபாரமான வளர்ச்சி, மோடிக்கு அமெரிக்கா பாராட்டு' என்ற, செய்தி படித்தேன்.அமெரிக்க பார்லிமென்ட் ஆய்வுக்குழு, நரேந்திர மோடிக்கு நற்சான்று அளித்திருப்பது வியப்பாகத்தான் உள்ளது. முன்பு நரேந்திர மோடி, அமெரிக்காவிலுள்ள பெரும் முதலாளிகளின் மாநாட்டில், முதல்வராக கலந்து கொள்ள முயற்சித்த போது, மோடிக்கு அமெரிக்கத் தூதரகம் விசா வழங்க மறுத்து விட்டது; இது வரலாறு.இதைக் கண்டு, மோடி மனங்கலங்கி மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக, 'என்னை அமெரிக்க அரசு வரவேற்க தயாராகவில்லை என்றாலும், நான் குஜராத்தில் அமெரிக்க முதலீடுகளைக் கொண்டு வருவேன்' என்றார்.அதன்படியே, அமெரிக்க முதலாளிகள் குஜராத்தை நோக்கி படையெடுக்கத் துவங்கினர். இது, மோடியின் முதல் வெற்றி. பின், சமீபத்திய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, அவரை நெருக்கடிகளிலிருந்து மீட்டது.இதிலிருந்து துணிச்சலும், நேர்கொண்ட குறிக்கோளுடன் செயல்பட்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைப் போன்று, எவர் செயல்பட்டாலும், அதற்கு வெற்றி ஒன்றே விடையாகக் கிடைக்கும்.ஆகவே, 2014ல் பா.ஜ., கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக மோடி நின்றால், அதை எதிர்கொள்ள, எத்தனை முகங்கொண்டு ராகுல் போட்டியிட்டாலும், அவருக்கு படுதோல்வி ஒன்றே பரிசாகக் கிடைக்கும்.
இது உண்ணாவிரத சீசன்!ஆர்.சம்பத் குமார், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஹசாரே முன் வைத்த, மிரட்டலான கோரிக்கைகள் எதுவுமே, அரசால் ஏற்கப்படாத நிலையிலும், அவர் தன் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். அவரது ஆதரவாளர்கள், 'வெற்றி, வெற்றி' என குதூகலிக்க, மவுன சாமியார் மன்மோகன் சிங்கும், காங்கிரசும் நமட்டுச் சிரிப்பு சிரிக்க, ஹசாரேவுக்குக் கிடைத்தது வெற்றியா அல்லது தோல்வியா என, நடுநிலையாளர்கள் குழம்பி, மண்டை காய்ந்து போயுள்ளனர்.அடுத்து, நல்லிணக்கம் கோரி, நரேந்திர மோடியின் உண்ணா விரதம்; அவருக்குப் போட்டியாக, குஜராத் காங்., தலைவர் சங்கர் சிங் வகேலாவின் உண்ணாவிரதம். கூடங்குளத்தில் அணுமின் உலையை எதிர்த்து உண்ணாவிரதம்; பொய் வழக்குகள் போடப்படுவதை எதிர்த்து, தி.மு.க.,வினரின் அடை யாள உண்ணாவிரதம்.ஆக மொத்தத்தில், மாம்பழ சீசன், பலாப்பழ சீசன் என்பது போல், இது உண்ணாவிரத சீசன் போலும்!காந்திஜியின் ஆன்மா சாந்தி அடைவதாக!


