ரூ.31 ஆயிரம் கோடி இழப்புக்கு நான் பொறுப்பல்ல; மத்திய அமைச்சரவையே பொறுப்பு
ரூ.31 ஆயிரம் கோடி இழப்புக்கு நான் பொறுப்பல்ல; மத்திய அமைச்சரவையே பொறுப்பு
ரூ.31 ஆயிரம் கோடி இழப்புக்கு நான் பொறுப்பல்ல; மத்திய அமைச்சரவையே பொறுப்பு
புதுடில்லி : '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுரா சிறப்புக் கோர்ட்டில் வாதிட்டார்.
'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது தொடர்பான வாதம், சி.பி.ஐ., சிறப்புக் கோர்ட்டில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், முதல் இரண்டு நாட்கள், முன்னாள் அமைச்சர் ராஜா சார்பில் வாதாடப்பட்டது. அப்போது, 'மத்திய அமைச்சர் சிதம்பரத்தை, சாட்சியாகச் சேர்க்க வேண்டும்' என, ராஜா வழக்கறிஞர் வாதாடினார். மேலும், பிரதமருக்குத் தெரிந்தே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்தது என்று கூறியதோடு, வேறு சில குற்றச் சாட்டுகளையும் ராஜா கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, தொலைத்தொடர்புத் துறையின் செயலர் சித்தார்த்த பெகுராவின் வாதம் நேற்று துவங்கியது. 'அரசின் திட்டத்தை அமல்படுத்திய ஒரே காரணத்திற்காக, இவ்வழக்கில் பெகுரா பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்' என, அவர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் அமன் லேகி, நீதிபதி சைனி முன் தெரிவித்தார். பெகுரா சார்பில் அவர் கூறியதாவது: சித்தார்த்த பெகுரா மத்திய அரசு அதிகாரி. அவர் மத்திய அரசு உருவாக்கிய கொள்கையைத் தான் அமல்படுத்தினார். கொள்கையை உருவாக்குவது அவர் வேலையல்ல. அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. தொலைத்தொடர்புக் கொள்கை உருவாக்கப்பட்டதில், மத்திய அமைச்சரவைக்கு முழு பொறுப்பு உள்ளது. இந்தக் கொள்கையை அரசு பகிரங்கமாக ஆதரித்துள்ளது. அரசின் கொள்கையை அமல்படுத்தியதைத் தவறு என்று சொல்ல முடியாது. அவருக்கும் ஊழலுக்கும் சம்பந்தம் இல்லை. அவர் ஊழல் புரிந்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை.
கொள்கை முடிவு சரியானதா, தவறானதா என்று, முதலில் தீர்மானிக்க வேண்டும். அதன் பின்னரே அடுத்தவரின் தவறு பற்றிப் பேச வேண்டும். கொள்கையை அமல்படுத்தியதற்காக, பெகுரா தண்டிக்கப்பட்டுள்ளார். பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். கடந்த 2001ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்கு நுழைவுக் கட்டணமாக 1,649 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. இதை மாற்றுவது குறித்து விவாதிப்பதற்காக, கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி கூட்டம் நடந்தது. இதில், நுழைவுக் கட்டணத்தை அதிகரிக்காலம் என, கருத்து தெரிவித்தபோது, நிதித்துறைச் செயலராக இருந்த சுப்பாராவ் (தற்போது ரிசர்வ் வங்கி கவர்னராக உள்ளார்)ஆட்சேபம் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், நிதி அமைச்சராக இருந்த சிதம்பரமும் பங்கேற்றார். இதன் பின் மத்திய அமைச்சரவையின் முடிவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதில், நுழைவுக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இறுதியாக இந்த முடிவுக்கு அனுமதியளித்தது சுப்பாராவ் தான். மேலும் இந்த முடிவை எடுத்ததில், ஒட்டு மொத்த அமைச்சரவைக்கும் பொறுப்பு உள்ளது.
பெகுரா தொலைத்தொடர்புத் துறையின் செயலராக, கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிதான் பதவியேற்றார்.
சுப்பாராவ் என்ன நடவடிக்கை எடுத்தாரோ அதைத் தான் பெகுரா மேற்கொண்டார். பெகுரா குற்றவாளி என்றால், சுப்பாராவும் குற்றவாளி தானே. அரசு அதிகாரியான அவர் , அரசின் முடிவை அமல்படுத்தியது தவறா?. அரசின் கொள்கை முடிவை, அரசு ஊழியர் மட்டுமல்ல, யாராலும் எதிர்க்க முடியாது. இதில் அரசு ஊழியர் என்ற முறையில், பெகுரா தன் கடமையைச் செய்துள்ளார்.
அரசின் கொள்கை முடிவானது, லாபத்தை மட்டுமே கணக்கிட்டு எடுக்கப்படுவதில்லை. அந்த வகையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு 31 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டதற்கு, அரசின் கொள்கை முடிவு தான் காரணம். இது ஒரு கிரிமினல் குற்றம் ஆகாது. 'போட்டியை உருவாக்கி, சேவையை மேம்படுத்தும் நோக்கிலும், பயன்பாட்டை அதிகரிப்பது தான் அரசின் கொள்கை'. இந்தக் கொள்கை தவறு என்றால், அது கிரிமினல் குற்றம் ஆகாது. எனவே பெகுரா மீது குற்றச்சாட்டுகளை பதியக்கூடாது. இவ்வாறு வழக்கறிஞர் அமன் லேகி பெகுரா சார்பில் வாதாடினார்.
'2ஜி' வழக்கில் சித்தார்த்த பெகுரா, கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது, கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில்,கிரிமினல் சதித்திட்டம், ஏமாற்றுதல், மோசடி செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டன. வாதத்தைக் கேட்ட நீதிபதி சைனி, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.
ஜகா வாங்குகிறார் சிதம்பரம்: பாரதிய ஜனதா கடும் சாடல் : '2ஜி' வழக்கில் உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கும் தொடர்பு இருப்பதாக, பகிரங்கமாக குற்றச்சாட்டு எழுந்த பிறகும், எதிர்க்கட்சிகளின் கண்டனத்திலிருந்து தப்புவதற்காக, எதை எதையோ பேசி திருப்பப் பார்க்கிறார் ' என, பாரதிய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து, பா. ஜ., செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர், டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்த போது, அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் சிதம்பரம். ஒதுக்கீட்டுக்கு விலை நிர்ணயம் செய்வதில், ஏலம் விடலாம் என்ற முடிவை மாற்றி, ராஜா எடுத்த முடிவுக்கு சம்மதித்தது எப்படி? ஒதுக்கீடு பெற்ற கம்பெனிகள் பங்குகளை விற்றார்களா, பிரித்தார்களா என்பது பற்றி, டெக்னிக்கலாக பதிலளிப்பது போல், சிதம்பரம் பிதற்றுகிறார். இதை யார் கேட்டது? நாங்கள் கேட்ட இரண்டு கேள்விக்கு நேரடியாக பதிலளிக்கப் பயந்து கொண்டு, தொழில்நுட்ப ரீதியான விஷயங்களைப் போட்டுக் குழப்புகிறார்.
இன்னொரு பக்கம், உள்நாட்டுப் பயங்கரவாதிகளால் அபாயம் என்று பேசுகிறார். ராஜாவோ வழக்கில் சிதம்பரத்தை சாட்சியாகச் சேர்க்க வேண்டும் என்கிறார். அதற்குப் பதிலளிப்பதை விட்டு '2ஜி' விவகாரத்தையே கடந்த சில நாட்களாக திசை திருப்பும் நோக்கில், சிதம்பரம் பேசிவருகிறார். இவ்வாறு பிரகாஷ் ஜாவேத்கர் கூறினார்.


