புதுச்சேரி : புதுச்சேரி அரசு பொது நூலக சட்டத்தை இயற்றி நூலகத் துறையை உருவாக்க வேண்டுமென்று முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வணிக அவை வளா கத்தில் நடந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நீதிமன்ற உத்தரவுகளை ஏற்று, சமச்சீர் கல்வியை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். புதுச்சேரியின் பழமை வாய்ந்த ரோமன் ரோலண்ட் நூலகத்தை நவீன முறையில் இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏற்கனவே நூலகத்தில் இயங்கி வந்த நடமாடும் நூலகத்தை இயங்க ஏற்பாடு செய்ய வேண்டும். புதுச்சேரி அரசு பொது நூலக சட்டத்தை இயற்றி நூலகத் துறையை உருவாக்க வேண்டும், கலை பண்பாட்டுத்துறை நூலகங்களுக்கு புதுச்சேரி எழுத்தாளர்களின் படைப்புகளை வாங்க வேண்டும், புதுச்சேரி நகராட்சியின் கீழ் இயங்கி வரும் கம்பன் கலை அரங்கத்தின் வாடகையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் நலிவுற்ற இசை, நாடக, ஓவிய கலைஞர்களுக்கு அடையாள அட்டை அளித்து நலவாரியம் அமைத்து தரவேண்டும், சிறிய அளவிலான கூட்டங்கள், நூல் அறிமுக கூட்டம் நடத்தும் வகையில் அரசு வசதியுடன் கூடிய அரங்குளை இலவசமாக கிடைக்கும் வகையில் நிர்மாணிக்க வேண் டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.