Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பூமி வெப்பமாவதால் 21 தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம் : பவளப்பாறை வளர்ச்சி நடவடிக்கை அவசியம்

பூமி வெப்பமாவதால் 21 தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம் : பவளப்பாறை வளர்ச்சி நடவடிக்கை அவசியம்

பூமி வெப்பமாவதால் 21 தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம் : பவளப்பாறை வளர்ச்சி நடவடிக்கை அவசியம்

பூமி வெப்பமாவதால் 21 தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம் : பவளப்பாறை வளர்ச்சி நடவடிக்கை அவசியம்

ADDED : ஜூலை 28, 2011 01:24 AM


Google News

தூத்துக்குடி : காலத்தின் சுழற்சி, பருவநிலை மாற்றத்தால் மன்னார் வளைகுடா கடலில் உள்ள 21 தீவுகளும் பரப்பளவில் வேகமாக சுருங்கி வருகிறது.

இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மன்னார் வளைகுடா உலக முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் உயிரினங்கள் பல வகைகளுக்கும் புகலிடமாய் அமைந்துள்ளது. இதனால்தான் உலகளவில் வளமான பகுதியாக கருதப்பட்டு வருகிறது. இதன் முக்கியத்துவத்தை வெளியிடத்திற்கு தெரியப்படுத்தும் வகையில் கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா அமைக்கப்பட்டது. இந்த தேசிய பூங்கா 1980ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. மன்னார் வளைகுடா தேசிய பூங்காவில் 560 சதுர கி.மீ., பரப்பில், 0.25 ஹெக்டேர் முதல் 125 ஹெக்டேர் அளவிலான 21 தீவுகள் அமைக்கப்பட்டது. இந்த தீவுகளில் மீன்களின் இருப்பிடமாக பவளப்பாறை அதிகளவில் காணப்படுகிறது.



அத்துடன் 104 வகை கடின பவளப்பாறைகளும், மன்னார் வளைகுடா பகுதியில் வளர்ச்சியடைந்து காணப்படுகிறது. இதனை தவிர இந்திய கடலோரப் பகுதியில் காணப்படும் 2 ஆயிரத்து 200 மீன் இனங்களில் 20 சதவீதம் இந்த பகுதியில் காணப்படுகிறது. இதில் 450 இனங்கள் அடங்கும். இதனைப் போல 147 வகை கடல்பாசிகள், 108 வகை புரையுடலி இனங்கள், 80க்கும் மேற்பட்ட கணுக்காலிகள், 260 வகை மெல்லுடலி இனங்கள், 100 வகை முட்தோலிகள் மற்றும் 160 வகை கடல்பறவைகள் போன்ற பல்வேறு வகையான கடல்வாழ் உயிரினங்களுக்கு புகலிடமாக அமைந்துள்ளது. இந்த பூங்காவில் முக்கிய அங்கமாகக் கருதப்படும் வான்தீவு, காசுவார்தீவு, விலங்குசல்லி தீவு, காரைச்சல்லிதீவு, உப்புத்தண்ணிதீவு, புலுவினிசல்லிதீவு, நல்லதண்ணிதீவு, ஆணையப்பர்தீவு, வாலிமுனைதீவு, அப்பாதீவு, பூவரசன்பட்டிதீவு, தலையாரிதீவு, வாழைதீவு, முள்ளிதீவு, முயல்தீவு, மனோலிதீவு, மனோலிபுட்டிதீவு, மரிச்சான்தீவு, குருசடைதீவு, புள்ளிவாசல்தீவு, சிங்கில்தீவு ஆகிய 21 தீவுகள் உள்ளது. இந்த தீவுகளில் தூத்துக்குடி குழுவில் 4 தீவுகளும், வேம்பார் குழுவில் 2 தீவுகளும், கீழக்கரை குழுவில் 7 தீவுகளும், மண்டபம் குழுவில் 7 தீவுகளும் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.



இந்த தீவுகளினால் ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்ட கடற்கரை பகுதிகள் பெரும் பாதுகாப்பாக அமைந்துள்ளது. சுனாமி போன்ற பெரிய அளவில் ஏற்படக்கூடிய இயற்கை சீற்றங்களை தடுக்கும் பாதுகாப்பு அரணாக அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த 2004ம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி தாக்கத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள கடற்கரை கிராமங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. இப்படி பல்வேறு அம்சம் கொண்ட இந்த தீவுகளில் மாறிவரும் பருவநிலை காரணமாக இங்குள்ள 21 தீவுகளும் காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 2 தீவுகள் கடலில் மூழ்கிவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தீவுகளின் பரப்பளவு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. ஆதலால் இத்தீவுகள் பெரும் ஆபத்தை சந்தித்து வருகிறது.

மன்னார் வளைகுடா தீவுகளினால் தூத்துக்குடி குழுவில் உள்ள சல்லிதீவு, கீழக்கரை குழுவில் உள்ள பூவரசன்பட்டி ஆகிய 2 தீவுகளும் கடல்மட்டத்தில் இருந்து தாழ்ந்துள்ளது. இதனால் இந்த 2 தீவுகளும் மூழ்கத் துவங்கிவிட்டது. இந்த 21 தீவுகளில் 2 தீவுகளும் மிகச் சிறியவை ஆகும். இதனைப்போல் பிற தீவுகளும் நாளுக்கு நாள் வேகமாக பரப்பளவில் குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.



ஏற்கனவே கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு நகரப் பகுதியில் வீடுகள் கட்டுவதற்காக இங்குள்ள பவளப்பாறைகள் வெட்டியெடுக்கப்பட்டு வந்தன. காலத்தின் சுழற்சி காரணமாக வெட்டி எடுக்கப்பட்ட பாறைகள் இன்னும் வளர்ச்சியடையாமல் உள்ளது. பருவநிலை மாற்றத்தாலும் நாளுக்கு நாள் இந்த பாறைகள் தேய்ந்து கொண்டு தான் செல்கிறது. சல்லிவகை பவளப்பாறைகள் ஆண்டுக்கு 5 முதல் 10 செ.மீ அளவிற்கு வளருமாம். தற்போது நிலவரப்படி ஆண்டுக்கு 1 செ.மீ அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது கடந்த சில ஆண்டுகளாக உலக வெப்பமயமாதல் மாற்றத்தினால் பவளப்பாறை வளர்ச்சி குறைந்து காணப்படுகிறது. இப்பாறைகளின் மீது கடல் அலைகள் மோதுகிறது. இதனால் நாளுக்குநாள் பவளப்பாறைகள் துகள் துகளாக சிதறி பாறையின் அளவு குறைந்து வருகிறது.



இதனால் தீவுகள் நகரவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தூத்துக்குடி, வேம்பார், கீழக்கரை போன்ற குழுவில் உள்ள தீவுகளும் கடலை நோக்கி நகரத் துவங்கிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற பல்வேறு பருவ மாற்றங்களினால் மீன்கள் மற்றும் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் போன்றவைகள் பெரிதும் பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டள்ளது. இங்குள்ள கடல்வாழ் உயிரினங்கள் கடற்கரை நோக்கியும், பிற இடத்திற்கும் செல்ல ஆராம்பிக்கின்றன. தீவுகளின் பரப்பளவு குறைவின் காரணத்தினால் இயற்கை சீற்றங்கள் கடற்கரையை தாக்கும் நிலையும் ஏற்படுமாம். எனவே இந்நிலைமையை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பவளப்பாறை வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us