ADDED : செப் 17, 2011 09:36 PM
திருப்பூர்: கடன் பிரச்னையால் தூக்குப் போட்ட காதல் மனைவி உயிருக்குப் போராடினார்; பதட்டத்தில் கணவர் விபத்தில் சிக்க, இருவரும் ஒரே நாளில் உயிரிழந்தனர்.
திருப்பூர் பூம்புகார் நகரை சேர்ந்தவர் குபேரன், 35.
இவரது மனைவி கலையரசி, 30. இருவரும் பனியன் தொழிலாளர்கள். காதலித்து திருமணம் செய்தவர்கள். ஆறு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த ஆறு மாதங்களாக சரியாக வேலை இல்லாததால், சிலரிடம் கடன் வாங்கினர். அதை திருப்பிச் செலுத்த முடியவில்லை. கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. குபேரன் வீட்டுக்கு, சென்னையிலிருந்து நேற்று வந்த உறவினர்கள், இருவரையும் சென்னைக்கு வந்துவிடுமாறு கூறியுள்ளனர்; கலையரசி மறுத்துள்ளார். உறவினர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. வீட்டுக்கு எதிரில் உள்ள தாய் வீட்டுக்கு வேகமாய் சென்ற கலையரசி, வீட்டிற்குள் சென்று தாழிட்டார். சந்தேகமடைந்த உறவினர்கள், கதவை உடைத்து உள்ளே சென்ற போது, கலையரசி சேலையில் தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தென்னம்பாளையத்தில் பள்ளி அருகில், ஆம்புலன்ஸ் எதிரே வந்ததால், ஆட்டோவில் இருந்து, அவ்வாகனத்துக்கு கலையரசியை மாற்றிக் கொண்டிருந்தனர். வேறொரு ஆட்டோவில் பதற்றத்துடன் வந்த கணவர் குபேரன், ஆட்டோவை விட்டு இறங்கி, ஆம்புலன்ஸ் நோக்கி ஓடி வந்தார். அப்போது, திருப்பூரில் இருந்து பல்லடம் சென்ற லாரி, குபேரன் மீது வேகமாக மோதியது. குபேரன் பலத்த காயமடைந்தார். பின், அவரும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர். திருப்பூர் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.