/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மன்னர்கால ஆட்சியை விளக்கும் கல்வெட்டுகள் பராமரிக்கப்படுமா?மண்ணில் புதையும் அவலம்மன்னர்கால ஆட்சியை விளக்கும் கல்வெட்டுகள் பராமரிக்கப்படுமா?மண்ணில் புதையும் அவலம்
மன்னர்கால ஆட்சியை விளக்கும் கல்வெட்டுகள் பராமரிக்கப்படுமா?மண்ணில் புதையும் அவலம்
மன்னர்கால ஆட்சியை விளக்கும் கல்வெட்டுகள் பராமரிக்கப்படுமா?மண்ணில் புதையும் அவலம்
மன்னர்கால ஆட்சியை விளக்கும் கல்வெட்டுகள் பராமரிக்கப்படுமா?மண்ணில் புதையும் அவலம்
ADDED : ஜூலை 13, 2011 09:57 PM
மடத்துக்குளம் : மடத்துக்குளம் பகுதியில், நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முன்னோர்கள், மன்னர்கால ஆட்சி முறை குறித்து இளைய தலைமுறைக்கு விளக்கும் வகையிலுள்ள கல்வெட்டுகள் பராமரிப்பின்றி வீணாகி வருகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் கண்டுகொள்ளாததால், கல்வெட்டுகள் 'வெறும் கற்களாக' உருமாறியுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்த மன்னர் கால வரலாறு, யார் ஆட்சி காலத்தில் கோவில் கட்டப்பட்டது; அதன் சிறப்பம்சம், கட்டுமானப்பணிகள், முன்னோர்களின் வாழ்க்கை முறை ; கோவில் கட்டுவதன் நோக்கம், நிர்வாகம் குறித்து தகவல்கள், வருவாய்க்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்கள், அரசு மானியங்கள், ஆட்சிமுறைகள் குறித்த தகவல்களை கல்வெட்டுகள் மூலமாக தெரியப்படுத்தினர். ஆட்சி மற்றும் பழங்கால நடைமுறைகள் குறித்து வருங்கால சந்ததிகளுக்கு விளக்கும் வகையில், கோவில்களின் சுவர்களில் வரலாறு பொறிக்கப்பட்டன. முன்னோர்கள் எழுதி வைத்த கல்வெட்டுக்களை பயன்படுத்தி சில மன்னர்கள் ஆட்சி செய்ததாகவும் பல்வேறு வரலாற்று நூல்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. கால மாற்றத்தினால், கல்வெட்டிற்கு பதிலாக செப்பு பட்டயம், பத்திரங்கள் மூலமாகவும் தகவல் பதியப்பட்டன. வரலாற்றைச்சுமந்து நிற்கும் கல்வெட்டுகள் தற்போது பராமரிக்கப்படாமல் வீணாகி வருகின்றன. தற்போதைய காலகட்டத்தில் கல்வெட்டுக்கள் பராமரிக்கப்படாமல் பல இடங்களில் சுண்ணாம்பு பூசும்போதும், கட்டுமானப்பணிகளின்போதும்,மண்ணுக்குள் புதைந்து வரும் நிலை உள்ளது. மடத்துக்குளம் அருகேயுள்ள கடத்தார், சோழமாதேவி, கொழுமம் பகுதியிலுள்ள கோவில்களில் சோழர்கள் காலம் குறித்து விளக்கும் கல்வெட்டுகள் உள்ளன.
அமராவதி ஆற்றுப்பகுதி பல நூறு ஆண்டுகளுக்கு முன் சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்துள்ளது என்பதும், மடத்துக்குளம் பகுதியிலுள்ள சைவ,வைணவ கோவில்கள் விக்கரமசோழ மன்னர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என்பதும் இந்த பகுதிகோவில்களிலுள்ள கல்வெட்டுக்களிலிருந்து தெரிய வருகிறது. தொலை தொடர்புகள் இல்லாத, பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தில் தஞ்சைபகுதியை மையமாக வைத்து ஆண்ட சோழ மன்னர்களின் நேரடி ஆட்சி எல்லைக்குள் மடத்துக்குளம், உடுமலை பகுதிகள் இருந்தது என்பது உள்ளிட்ட தகவல்கள் கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படுகிறது. காரத்தொழுவு வைணவக்கோவிலில் உள்ள கல்வெட்டு நிலா மற்றும் வாளுடன் கல்வெட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குலசேகர உடையார் கோவில் அமைந்துள்ள சோழமாதேவி கோவில் சோழ மன்னரின் மனைவி சோழன்மாதேவி என்பவரின் பெயரால் வழங்கப்படுகிறது என்பது கல்வெட்டுக்களால் தெளிவாகிறது.மடத்துக்குளம் பகுதியிலுள்ள பல்வேறு கோவில்களில் சுவர்கள் முழுவதும் கல்வெட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மிக பழமையான கல்வெட்டுக்கள் கோவில்களுக்கு உரிய பல நூறு ஏக்கர் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் குறித்தும்,கோவில் நிர்வாக உரிமை குறித்தும் விளக்குகிறது. ஆனால் இது போன்று வரலாற்றை சுமந்த கல்வெட்டுகள் போதிய பராமரிப்பு இல்லாமல் புதையுண்டு வருவதால் கோவில்கள், மூதாதையர்கள் குறித்து முழுமையான தகவல்கள் கிடைப்பதில்லை.பழமை வாய்ந்த கோவில்களிலுள்ள சிற்பங்கள் நிறைந்த கல்தூண்கள், கல்வெட்டுக்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இந்த பகுதியின் வரலாறு அனைவருக்கும் தெரியவருவதுடன் புராதான சின்னங்கள் குறித்த விழிப்புணர்வு கிடைக்கும்.


