ADDED : ஜூலை 13, 2011 02:59 AM
தேவகோட்டை: போலீஸ் நிலைய ஜாமீனில் விட லஞ்சம் கேட்ட எஸ்.ஐ.,யைபோலீசார் கைது
செய்தனர்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தானுச்சாஊரணியிலுள்ள கணேசன்
செட்டியாருக்கு சொந்தமான இடத்திலுள்ள கருவேலமரங்களை அதே ஊரைச் சேர்ந்த
சரவணன்,ஐயப்பன் ஆகியோர் வெட்டினர். அதே ஊரைச் சேர்ந்த காசி இதனை தட்டிக்
கேட்டார்.இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில் காசி
காயமடைந்தார். இரண்டு தரப்பினரும் தந்த புகாரின் பேரில் ஆறாவயல் போலீசார்
வழக்கு பதிவு செய்தனர்.போலீசாரால் கைது செய்யப்பட்ட சரவணன், ஐயப்பன்
இருவரும் போலீஸ் நிலைய ஜாமீனில் நேற்று முன்தினம் வெளியே வந்து விட்டனர்.
காயமடைந்த காசி நேற்று ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இவர் மீது 294 பி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் காசியை காவல் நிலைய ஜாமீனில் விடுவதற்காக இவரது மகன்
பாண்டியிடம் ஆறாவயல் எஸ்.ஐ.,அர்ஜூனன் ரூ.2 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
இது குறித்து பாண்டி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., அருளானந்தத்திடம் புகார்
செய்தார்.நேற்றிரவு 8 மணிக்கு பாண்டி,எஸ்.ஐ., அர்ஜூனிடம் பணத்தை கொடுத்த
போது மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.


