"பாஸ்கோ' உருக்காலை அமைக்க ஒத்துழைப்பு : ஜனாதிபதியிடம் தென்கொரிய அதிபர் கோரிக்கை
"பாஸ்கோ' உருக்காலை அமைக்க ஒத்துழைப்பு : ஜனாதிபதியிடம் தென்கொரிய அதிபர் கோரிக்கை
"பாஸ்கோ' உருக்காலை அமைக்க ஒத்துழைப்பு : ஜனாதிபதியிடம் தென்கொரிய அதிபர் கோரிக்கை

சியோல் : 'இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், 'பாஸ்கோ' உருக்காலை அமைப்பதற்கு, இந்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்' என, தென்கொரிய அதிபர் லீ மியுங் பாக், இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில், தென்கொரியாவின், 'பாஸ்கோ' நிறுவனம், 54 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருக்காலை அமைக்க, 2005ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், உருக்காலைப் பணிகள் துவக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த இருநாட்களாக தென்கொரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஜனாதிபதியிடம், தென் கொரிய அதிபர் லீ மியுங் பாக், பாஸ்கோ விவகாரம் குறித்துப் பேசினார்.
இதுகுறித்து, அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'இந்தியாவில் சாலை, மின்சாரம் மற்றும் தொழிற்சாலை ஆகிய உட்கட்டமைப்புப் பணிகளில், தென்கொரிய நிறுவனங்கள் பங்களிக்கும். அதே நேரம், ஒடிசாவில்,'பாஸ்கோ' உருக்காலை அமைப்பதற்கு இந்திய அரசின் ஒத்துழைப்பு வேண்டும் என, அதிபர் குறிப்பிட்டார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம்: தொடர்ந்து, இந்தியாவின் அணுமின் திட்டங்களில் தென்கொரிய நிறுவனங்கள் பங்கேற்க வழி செய்யும் இருதரப்பு சிவில் அணுசக்தி ஒப்பந்தம், நேற்று கையெழுத்தானது. கடந்தாண்டு அக்டோபரில், வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடந்த 'ஏஷியான்' உச்சிமாநாட்டின் போது, இருதரப்பு அணுசக்தி ஒப்பந்தம் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் லீ மியுங் பாக் இடையில் பேச்சு நடந்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, கனடா, மங்கோலியா, கஜகஸ்தான், அர்ஜென்டினா மற்றும் நமீபியா ஆகிய எட்டு நாடுகள் இதுவரை, இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. மேலும், கடல்வழிப் போக்குவரத்து, இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு, ஊடகப் பரிமாற்றம், இருநாடுகளிலும் பணிபுரியும் இருநாட்டு பணியாளர்களின் சமூகப் பாதுகாப்பு ஆகிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.