PUBLISHED ON : அக் 05, 2011 12:00 AM

பா.ம.க., நிறுவனர், 'விஞ்ஞானி' ராமதாஸ் அறிக்கை:பராமரிப்பு பணிகளில் அக்கறை காட்டாததும், தூத்துக்குடி, மேட்டூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள அணுமின் நிலையங்களில் போதிய நிலக்கரி இருப்பு வைக்கப்படாததும், மின்வெட்டுக்குக் காரணம்!
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேச்சு: இந்த ஆண்டு தீபாவளிக்கு, பொதுமக்கள் கதர் துணிகளை வாங்க முன்வர வேண்டும். இதன் மூலம், ஏழை நெசவாளரின் வாழ்வில், ஒளியேற்ற முடியும். காதி பொருள்களை வாங்குவதன் மூலம், ஏழைகளின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முடியும்.
அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை பேச்சு: ராஜா, கனிமொழி அடுத்து மத்திய அமைச்சர் சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி ஆகியோரும் சிறைக்கு செல்லப் போகின்றனர். கருணாநிதியுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் அனைவரும், ஒரு நாளாவது சிறைக்குச் செல்ல வேண்டிய தருணம் வரும்.
இ.கம்யூ., தேசிய செயலர் ராஜா பேட்டி: குஜராத்தில், ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவர் வீட்டில் போலீசார் அத்துமீறியதும், குடும்பத்தினரை அச்சுறுத்தியதும் ஜனநாயக நடைமுறைக்கு ஏற்புடையது அல்ல. கைதான சஞ்சீவ் பட்டை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இந்த விவகாரத்தை வெறும் சட்டம், ஒழுங்குப் பிரச்னையாகக் கருதக் கூடாது. உடனே தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்செந்தூர் தொகுதி, தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி: என் மீது போடப்பட்ட வழக்கில், நிச்சயம் தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். இருந்தாலும், என்னை அதிக நாட்கள் சிறையில் வைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தான், ஜாமின் கிடைக்கவிடாதபடி தொடர்ந்து தடுத்து வந்தனர். ஆனால், என் பக்கம் நியாயம் இருந்ததால், அவர்கள் தோற்றுவிட்டனர் என்பது தான் உண்மை.
அகில இந்திய கிசான் சபா பொதுச் செயலர் வரதராஜன் அறிக்கை: கடந்த ஓராண்டில் மட்டும் யூரியாவின் விலை, 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், விலையை மேலும் உயர்த்துவதற்கான சுதந்திரத்தை உர நிறுவனங்களுக்கு வழங்குவதென்ற மத்திய அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது.


