ADDED : செப் 06, 2011 01:37 AM
மதுரை : மதுரை மாநகராட்சியில் நிதி நெருக்கடியை சமாளிக்க, நிதி நிறுவனங்களிடம் கடன் கேட்டு நிர்வாகம் கையேந்தியுள்ளது.
'கடந்த ஐந்து ஆண்டில் மேற்கொண்ட முக்கிய திட்டங்கள் நிதியின்றி முடக்கம், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ஒவ்வொரு மாதமும் திண்டாட்டம்,' இதுவே மாநகராட்சியின் இன்றைய நிலை.
ஆறாவது ஊதிய கமிஷன் நடைமுறைக்கு பின், சம்பளச்செலவு மாதம் 12 கோடி ரூபாய். 'திட்டத்திற்கு வரும் நிதியை சம்பளத்திற்கு எடுப்பது, அதன் பின் வரும் நிதியை முந்தைய திட்டத்திற்கு செலவிடுவது,' என, இதுவரை சமாளிக்கப்பட்டது.
தற்போது 300 கோடி ரூபாய் இருந்தால் மட்டுமே, நிர்வாக சிக்கலை தீர்க்க முடியும் என்ற நிலை. மத்திய, மாநில அரசுகள் ஏற்கனவே நிதியளித்த நிலையில், மீண்டும் கிடைப்பது சிரமம். இருந்தும், மாநில அரசின் உதவி பெற மாநகராட்சி தீவிரமாக உள்ளது. பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால், திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை நிறைவேற்ற, வேறு வழிகளில் நிதி திரட்டும் முயற்சி நடக்கிறது. குறைந்த வட்டிக்கு கடன் தரும், நிதி நிறுவனங்களையும் மாநகராட்சி நாடியுள்ளது.


