Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஆற்றை தூர்வாரி சீரமைத்த விவசாயிகள் நீரை சேமிக்க தடுப்பணை கட்டப்படுமா?

ஆற்றை தூர்வாரி சீரமைத்த விவசாயிகள் நீரை சேமிக்க தடுப்பணை கட்டப்படுமா?

ஆற்றை தூர்வாரி சீரமைத்த விவசாயிகள் நீரை சேமிக்க தடுப்பணை கட்டப்படுமா?

ஆற்றை தூர்வாரி சீரமைத்த விவசாயிகள் நீரை சேமிக்க தடுப்பணை கட்டப்படுமா?

ADDED : ஜூலை 25, 2011 12:29 AM


Google News

திருவெண்ணெய் நல்லூர் : விவசாயிகள் தூர்வாரி சீரமைத்த மலட்டாற்றின் குறுக்கே அரசு தடுப்பணை கட்டினால் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

சமூகஆர்வலர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆற்றின் பல்வேறு இடங்களில் தடுப்பணை அமைத்து நிலத்தடி நீர் மட்டம் உயர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருக்கோவிலூர் பெண்ணையாற்றிலிருந்து கோரையாறு பிரிந்து மீண்டும் ஏனாதிமங்கலத்தில் கலக்கிறது. இதேப்போல் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த டி.எடையார் கோரையாற்றிலிருந்து மலட்டாறு பிரிந்து கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் கெடிலம் நதியில் கலந்து கடலில் கலக்கிறது. நீர்வரத்து அதிகம் இல்லாத இந்த ஆற்றில் கடந்த 1972ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வெள் ளப் பெருக்கின்போது ஆங்காங்கே மணல்திட்டுக்கள் ஏற்பட்டு நீர்வரத்து முற்றிலும் தடைபட்டது.



இதில் நீர்வரத்தை ஏற்படுத்தினால் விவசாயத்திற்கு நன்மை கிடைக்கும் என கருதிய விவசாயிகள் ஆலோசனை நடத்தினர். இவர்கள் ஒன்றிணைந்து கடந்த 1993ம் ஆண்டு 'ஜீவநதி மலட்டாறு நிலத்தடி நீர் மேம்பாட்டு எழுச்சிக்கூடல்' என்ற அமைப்பை துவக்கி ஆற்றை தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். அப்போது பொருளாதார வசதி குறைவானதால் இப்பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து 1997ம் ஆண்டு அப்போதைய கலெக்டர் பிரவீண்குமார் அண்ணாமறுமலர்ச்சி திட்டத்தில் 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார். இதைப் பயன்படுத்தி அரசூரிலிருந்து காரப்பட்டு வரையில் ஒன்னரை கி.மீ., தூரத்திற்கு ஆறு தூர் வாரப்பட்டது. மீதமுள்ள பகுதியில் ஆற்றை தூர் எடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.



இருப்பினும் பணியில் தொய்வு ஏற்பட்டதை தொடர்ந்து ஜீவநதி அமைப்பின் தலைவராக சேமங்கலத்தை சேர்ந்த தட்சணாமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். இவரின் முயற்சியாலும், நெல்லிக்குப்பம் முன்னாள் எம்.எல்.ஏ., சபாராஜேந்திரன், பாரி சர்க்கரை ஆலை மற்றும் விவசாயிகளின் பங்களிப்போடு பல லட்சம் ரூபாய் செலவுகள் செய்து தற்போது கடலூர் மாவட்டம் கட்டமுத்துப்பாளையம் வரை ஆற்றை தூர்வாரி நீர்வரத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆற்றில் நீர்வருவதற்கு மழை வேண்டி ஆண்டுதோறும் அரசூர் மலட்டாற்றில் வருணபூஜையை நடத்துகின்றனர்.



இந்த ஆற்றில் தற்போது 100 முதல் 300 அடி வரை மணல்பாங்கு அதிகம் இருப்பதால் நீர்வரத்து காலங்களில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும், ஜீவநதி அமைப்பின் முயற்சியால் 1997ம் ஆண்டு 190 அடியாக இருந்த நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கடந்த 2010ம் ஆண்டில் 50 அடியாக உயர்ந்துள்ளதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். அதிர்ஷ்டவசமாக மணல் அதிகம் உள்ள மலட்டாறு வனத்துறையின் கட்டுப்பாட்டில் வந்ததால் மணல் அப்படியே இருக்கிறது. இந்த மணலையும் விற்பனைக்கு விட்டிருந்தால் நிச்சயம் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் எனவும் விவ சாயிகள் தெரிவித்தனர்.



ஒருபுறம் பெண்ணையாற்றின் படுகைகளில் ஏராளமான இடங்களில் மணல் எடுத்து வருகின்றனர். மணல் குறைந்துவிட்டதால் பெண்ணையாற்றில் வரும் நீர் நேராக கடலில் கலக்கிறது. இதனால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. மலட்டாற்றில் நீர்வரத்து ஏற்படும்போது இங்குள்ள மணலால் பெண்ணையாற்று பகுதி விவசாயிகளுக்கும் நீர்மட்டம் உயருவதற்கு வாய்ப்பாக அமைகிறது. விழுப்புரம் மாவட்டம் டி.எடையார் முதல் கடலூர் மாவட்டம் வரிஞ்சிப்பாக்கம் வரை 41 கி.மீ., தூரத்திற்கு மலட்டாற்றின் குறுக்கே எங்கும் தடுப்பணைகள் இல்லாததால் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.



ஊர்கூடி தேர் இழுப்பதைப்போல், விவசாயிகள் ஒன்றிணைந்து நீர்வரத்தே இல்லாத ஆற்றை தூர்வாரி நீர்வரத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளனர். மலட்டாற்றின் குறுக்கே பல இடங்களில் தடுப்பணை கட்டிக்கொடுத்தால் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக இந்த அமைப்பினர் கடந்த தி.மு.க., அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் விவசாயிகள் தாங்களே முன்வந்து ஆற்றை தூர்வாரி நீர்வரத்தே இல்லாத ஆற்றில் நீர்வரத்திற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். இவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆற்றின் பல்வேறு இடங்களில் தடுப்பணை கட்டிக்கொடுத்தால் நிலத்தடி நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. புதியதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us