ADDED : செப் 04, 2011 11:40 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி - சர்க்கார்பதி வழித்தடத்தில், நிறுத்தம்
செய்யப்பட்ட பஸ் மீண்டும் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பழைய சர்க்கார்பதி
பொதுமக்கள், அரசு போக்குவரத்துக்கழக கோட்ட மேலாளரிடம் கொடுத்த மனு:
பொள்ளாச்சி, சேத்துமடை அருகே பழைய சர்க்கார்பதி செட்டில்மென்ட்
அமைந்துள்ளது. செட்டில்மென்ட் பகுதியிலிருந்து 1.5 கி.மீ., தூரம் காட்டு
பாதையில் நடந்து வந்து பஸ் ஸ்டாப்பிற்கு செல்ல வேண்டியுள்ளது. இங்கிருந்து,
இயக்கப்படும் 34 ஏ பஸ் மூலம் சேத்துமடை, பொள்ளாச்சி பகுதிகளுக்கு சென்று
வந்தோம். கடந்த சில நாட்களுக்கு முன் பகல் 3.30 மணிக்கு இயக்கப்பட்ட பஸ்
நிறுத்தப்பட்டது. இந்த 'டிரிப்'க்கு பின் மீண்டும், மாலை நேரத்தில் ஒரு பஸ்
இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் வரும் போது, காட்டு பாதையில் போதிய
வெளிச்சம் இருப்பதில்லை. இதனால், வன விலங்குகளின் பயம் உள்ளது. எனவே, இந்த
வழித்தடத்தில் நிறுத்தம் செய்யப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என
மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர்
ராஜசேகரன் கூறியதாவது: பழைய சர்க்கார்பதியில் பகல் 3.30 மணிக்கு
இயக்கப்பட்ட 'டிரிப்'பில் குறைவான பயணிகள் மட்டும் பயணம் செய்தனர். ஆடி
மாதத்தில் 'டிரிப்' நிறுத்தப்பட்டது. தற்போது, பொதுமக்கள் புகார்
அளித்துள்ளதால், அந்த வழித்தடத்தில் உடனடியாக மீண்டும் பஸ் இயக்க
சம்பந்தப்பட்ட கிளை மேலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.


