ஆதர்ஷ் ஊழல்: பணப்பரிமாற்ற தகவல்களை சமர்ப்பிக்க சி.பி.ஐ.,க்கு ஐகோர்ட் உத்தரவு
ஆதர்ஷ் ஊழல்: பணப்பரிமாற்ற தகவல்களை சமர்ப்பிக்க சி.பி.ஐ.,க்கு ஐகோர்ட் உத்தரவு
ஆதர்ஷ் ஊழல்: பணப்பரிமாற்ற தகவல்களை சமர்ப்பிக்க சி.பி.ஐ.,க்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : செப் 06, 2011 01:35 AM
மும்பை: மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீட்டில் நடந்த பணப் பரிமாற்றம் குறித்த விவரங்களை அளிக்கும் படி, சி.பி.ஐ.,க்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மும்பை கடற்கரை பகுதியான கொலாபாவில் கார்கில் தியாகிகளுக்காக குடியிருப்பு கட்டப்பட்டது. இதை, ராணுவ தளபதிகள் மற்றும் அரசியல் பிரமுகர் பலர், தங்கள் உறவினர்களுக்காக ஆக்கிரமித்து கொண்டனர். இந்த குடியிருப்பு ஊழல் குறித்து, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இதற்கிடையே, பிரவீன் வாடிகோயன்கார் என்பவர், பொது மக்கள் நலன்கோரும் மனுவை மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார். 'ஆதர்ஷ் குடியிருப்பில், 103 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் கொடுத்த பணம் எவ்வளவு, காசோலையாக எவ்வளவு பேர் கொடுத்தனர், உடனடியாக பணத்தை எத்தனை பேர் கொடுத்தனர், என்ற விவரத்தை அமலாக்கத் துறையினர் வெளியிட கோர்ட் உத்தரவிட வேண்டும்' என, மனுவில் கூறப்பட்டிருந்தது. இம்மனுவை நீதிபதிகள் ரஞ்சனா தேசாய், ஆர்.ஜி.கெட்கார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. நீதிபதிகள் குறிப்பிடுகையில், 'ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீட்டு தொடர்பாக நடந்த பணப்பரிமாற்ற விவரங்களை சி.பி.ஐ., அடுத்த மாதம் 3ம்தேதி கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். சி.பி.ஐ., தன்னுடைய விசாரணையை இளநிலை அதிகாரிகளோடு நிறுத்தி விடாமல், மூத்த அதிகாரிகளிடமும் நடத்த வேண்டும்' என்றனர். மகாராஷ்டிர நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தில், ஆதர்ஷ் குடியிருப்பு தொடர்பான பைல்கள் மாயமானதால் அந்த அலுவலகத்தில் ஆதர்ஷ் குடியிருப்பு தொடர்பான விவரங்கள் அடங்கிய கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தடய அறிவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தடய அறிவியல் துறை ஆய்வக தகவல்கள் கிடைத்ததும் கோர்ட்டில் சமர்ப்பிப்பதாக சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.


