பெரம்பலூரில் மருத்துவமனை கட்ட டாடா ரூ.20 கோடி கொடுக்க முன்வந்தாரா? :சிறப்பு கோர்ட்டில் பல்வா வாதம்
பெரம்பலூரில் மருத்துவமனை கட்ட டாடா ரூ.20 கோடி கொடுக்க முன்வந்தாரா? :சிறப்பு கோர்ட்டில் பல்வா வாதம்
பெரம்பலூரில் மருத்துவமனை கட்ட டாடா ரூ.20 கோடி கொடுக்க முன்வந்தாரா? :சிறப்பு கோர்ட்டில் பல்வா வாதம்
புதுடில்லி : ' அறக்கட்டளை பெயரால் பெரம்பலூரில் மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு, டாடா குழுமத்தினர் ரூ.20 கோடி கொடுக்க முன்வந்தனர்.
'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. நீதிபதி ஓ.பி.சைனி, இந்த வழக்கை விசாரித்து வருகிறார். வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக, குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதன் மீதான வாதம், தற்போது நடந்து வருகிறது. முன்னாள் அமைச்சர் ராஜாவுடன் சேர்ந்து, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயத்தில் சதி செய்ததாக, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் புரமோட்டர் ஷாகித் பல்வா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தன் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு பெற்றதற்கு பலனாக, 'கலைஞர் டிவி'க்கு 200 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்த விவகாரத்திலும், இவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. தன் மீதான புகாரை மறுத்து, நேற்று முன்தினம் கோர்ட்டில் வாதாடினார். நேற்றும் ஷாகித் பல்வாவின் வாதம் தொடர்ந்தது.
பல்வா சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் மஜீத் மேமன், கோர்ட்டில் கூறியதாவது:
அப்பாவி: தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அளித்தது தொடர்பான அனைத்து முடிவுகளும், தொலைத் தொடர்பு துறையால் மேற்கொள்ளப்பட்டது. இதில், என் கட்சிக்காரர் ஷாகித் பல்வாவுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் அப்பாவி. தற்போது கூட, டில்லி பிராந்தியத்துக்கு 12 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம் கிடைக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், 4.4 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம் மட்டுமே தேவைப்பட்ட, டாடா நிறுவனத்துக்கு, அதை வழங்குவதற்கு தொலைத் தொடர்புத் துறையை தடுத்தது யாராக இருக்க முடியும். டாடா நிறுவனத்துக்கு ஒதுக்கீடு கிடைக்காததற்கு, நான் எந்த வகையிலும் காரணம் இல்லை.
இந்த விவகாரத்தில், அனைத்து முடிவுகளுமே, தொலைத் தொடர்புத் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிலைமை இவ்வாறு இருக்கும்போது, என் மீது எப்படி கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய முடியும்?
டில்லி பிராந்தியம், அதிகம் வருவாய் தரக் கூடியது என்றும், அதனால், இந்த பிராந்தியத்துக்கான உரிமம் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு கிடைத்ததாகவும், பொய் தகவல் தெரிவிக்கப்படுகிறது. வருவாய் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மதிப்பிடும்போது, டில்லி பிராந்தியம் ஐந்தாவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, டில்லி தொலைத் தொடர்பு பிராந்தியம், அதிகம் வருவாய் ஈட்டுவதாக எப்படி கூற முடியும்?
20 கோடி ரூபாய்: கடந்த 2009 செப்டம்பர் 15ல், ரத்தன் டாடா, அப்போதைய அமைச்சர் ராஜாவுக்கு எழுதிய கடிதத்தில், அறக்கட்டளை பெயரில் பெரம்பலூரில் மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு, 20 கோடி ரூபாய் நன்கொடை அளிப்பது பற்றி கூறியுள்ளார். வெளி நபர் ஒருவருக்கு, இவ்வளவு பெரிய தொகையை, டாடா நிறுவனம் கொடுப்பது நடைமுறையாக இல்லை என்றும், இருந்தாலும், பெரம்பலூர் மருத்துவமனை விவகாரத்தை, சிறப்பு விவகாரமாக எடுத்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சிறப்பு விவகாரம் தொடர்பான விஷயத்தை, சி.பி.ஐ., ஏன் பரிசீலிக்கவில்லை.
ஒருவர் தனக்கு சாதகமான விஷயம் நடப்பதற்கு, நன்கொடை அளிப்பது எளிதான வழியாக இருக்கும்போது, ராஜாவிடம் இருந்து சாதகமான முடிவை பெறுவதற்காக, 200 கோடி ரூபாயை, லஞ்சமாக, நான் ஏன் சுற்றுப் பாதையில் செலுத்த வேண்டும். அதுவும் அவருக்கு சேரக்கூடிய பணமாக இல்லாதபோது, என்பதை சிந்தியுங்கள். நான் கூட நன்கொடை என்ற பெயரில் அப்பணத்தைச் காசோலை மூலமாக தந்திருக்கலாமே.இவ்வாறு ஷாகித் பல்வா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மஜீத் மேமன் வாதாடினார்.


