/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விலை சரிந்தது; வாழை விவசாயிகள் வாட்டம்!விலை சரிந்தது; வாழை விவசாயிகள் வாட்டம்!
விலை சரிந்தது; வாழை விவசாயிகள் வாட்டம்!
விலை சரிந்தது; வாழை விவசாயிகள் வாட்டம்!
விலை சரிந்தது; வாழை விவசாயிகள் வாட்டம்!
ADDED : அக் 10, 2011 10:25 PM
அன்னூர் : நேந்திரன் வாழைத்தார் விலை ஒரே மாதத்தில் பாதிக்கும் கீழாக குறைந்ததால், விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.கோவை மாவட்டத்தில், கோவில்பாளையம், அன்னூர், சிறுமுகை, காரமடை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் நேந்திரன், கதளி ரக வாழை பயிரிடப்படுகிறது.
இங்கு விளையும் வாழைத்தார்களில் 90 சதவீதம், கேரளாவில் கோழிக்கோடு, கொல்லம், கொட்டாரக்கரா உள்ளிட்ட ஊர்களுக்கும், மும்பைக்கும் அனுப்பப்படுகிறது; அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் வாழைத்தார் வெட்டும் சீசன் துவங்கி, பிப்ரவரியில் முடிகிறது. இந்த ஆண்டு சீசன் துவக்கத்தில் ஒரு கிலோ நேந்திரன் 35 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கினர். இப்போது 12 ரூபாய்க்கு கேட்கின்றனர்.வாழை விவசாயிகள் கூறியதாவது:வழக்கமாக கேரளா மற்றும் உள்ளூர் வியாபாரிகள் தோட்டங்களுக்கு வந்து விலை பேசி, வெட்டி எடுத்து செல்கின்றனர். கடந்த மாதம் சீசன் துவங்கிய போது ஒரு கிலோ நேந்திரன் 35 ரூபாய்க்கு வாங்கினர். இந்த 'ரேட்' படிப்படியாக குறையத் தொடங்கியது. இப்போது ஒரு கிலோ வெறும் 12 ரூபாய்க்கு கேட்கின்றனர். கடந்த ஆண்டு இதே வாரத்தில் ஒரு கிலோ 18 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கினர். வாழைத்தார் வெட்டுவது இன்னும் உச்சத்தை எட்டவில்லை. இப்போதே விலை 12 ரூபாய்க்கு குறைந்து விட்டது. வரும் வாரங்களில் வாழைத்தார் வெட்டுவதும், வரத்தும் அதிகரிக்கும். இன்னும் விலை குறையும் வாய்ப்பு உள்ளது.ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, 11 மாதங்கள் தண்ணீர் கட்டி, உரம் போட்டு, மருந்து அடித்து, காற்றில் விழாமல், வேலை செய்தபின் இப்போது மிக குறைந்த விலை தான் கிடைக்கிறது. இதனால் வாழை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.இவ்வாறு வாழை விவசாயிகள் தெரிவித்தனர்.வாழைத்தார் மொத்த வியாபாரிகள் கூறுகையில்,''இந்த ஆண்டு வாழைத் தார் வரத்து அதிகரித்து விட்டது. கேரளாவிலும் வாழை அதிக பரப்பளவில் பயிரிட்டுள்ளதால் அங்கு தேவை குறைந்து விட்டது. இங்கிருந்து கொள்முதல் செய்து, போக்குவரத்து செலவு செய்து, கொண்டு போவதைவிட அங்கு விலை குறைவு. ஆனாலும் வரும் வாரங்களில் சற்று விலை கூட வாய்ப்புள்ளது. கதளி ரக வாழைக்கு 23 ரூபாய் விலை கிடைக்கிறது,'' என்றனர்.


