தேர்தல் கூட்டணி : விஜயகாந்த் திடீர் ஆலோசனை
தேர்தல் கூட்டணி : விஜயகாந்த் திடீர் ஆலோசனை
தேர்தல் கூட்டணி : விஜயகாந்த் திடீர் ஆலோசனை
ADDED : ஜூலை 27, 2011 07:54 PM
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி, கட்சி வளர்ச்சி குறித்து, புதுச்சேரி மாநில நிர்வாகிகளுடன் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.
சட்டசபைத் தேர்தல் வெற்றிக்கு பின், தே.மு.தி.க.,வின், 28 எம்.எல்.ஏ.,க்களுடன் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, 56 மாவட்டச் செயலர்கள் மற்றும் தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அணி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க.-, - தே.மு.தி.க., கூட்டணி வெற்றிக்காக உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், அவர்களுக்கு விஜயகாந்த் விருந்தும் வைத்தார். ஆனால், புதுச்சேரியில் தே.மு.தி.க., தோல்வியை தழுவியதால், அம்மாநில நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தவில்லை. தங்களையும் அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும் என, புதுச்சேரி மாநில நிர்வாகிகள் குரல் கொடுத்தனர். ஆனால், அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. ஒன்றரை மாதங்களுக்கு பின், புதுச்சேரி மாநில நிர்வாகிகளுடன் விஜயகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் பங்கேற்க, 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தனர். காலை 11 மணிக்கு துவங்கிய இந்த ரகசிய கூட்டம், பகல் 2.30 மணி வரை நடந்தது. அப்போது, விஜயகாந்த் பேசியதாவது: புதுச்சேரியை பொறுத்தவரை கட்சியின் வளர்ச்சி பின்தங்கி வருகிறது. இதற்கு நிர்வாகிகள் தான் பொறுப்பேற்க வேண்டும். குக்கிராமங்கள் சென்று அங்கு கட்சி அமைப்பை பலப்படுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் அபரிமித வளர்ச்சி பெற முடியும். அதுவே தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக அமையும். புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் நாம் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை. இதனால், நிர்வாகிகள் யாரும் துவண்டு விட வேண்டாம். உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது உறுதி. அதற்கான பணிகளை நிர்வாகிகள் உடனே துவக்க வேண்டும். புதுச்சேரியை பொறுத்தவரை, உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து அந்த நேரத்தில் பேசிக் கொள்ளலாம். இவ்வாறு விஜயகாந்த் பேசினார். இதில், கட்சி நிர்வாகிகள் இளங்கோவன், சுதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.