Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/இடவசதியில்லாமல் இயங்கும் காது கேளாதோர் பள்ளி

இடவசதியில்லாமல் இயங்கும் காது கேளாதோர் பள்ளி

இடவசதியில்லாமல் இயங்கும் காது கேளாதோர் பள்ளி

இடவசதியில்லாமல் இயங்கும் காது கேளாதோர் பள்ளி

ADDED : செப் 17, 2011 10:33 PM


Google News

தாம்பரம் : எம்.ஜி.ஆர்., ஆட்சியில் துவக்கப்பட்ட, சென்னை மாவட்ட காதுகேளாதோர் அரசு பள்ளி, போதிய வசதியின்றி வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.

இப்பள்ளிக்கு சொந்த கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில், மாற்றுத் திறனாளி நலன் துறையின் கீழ் 13 காதுகேளாதோருக்கான அரசு பள்ளிகள் இயங்குகின்றன. சென்னை, காஞ்சிபுரம், கடலூர், ஊட்டி, தர்மபுரி,சேலம்,ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சாவூர்,சிவகங்கை, விருது நகர் உள்ளிட்ட பகுதிகளில், இப்பள்ளிகள் உள்ளன.இப்பள்ளிகளில் மொத்தம் ஆயிரத்து 500 மாற்றுத் திறனாளி மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், சென்னை மாவட்டத்திற்கான பள்ளி, கடந்த 1987ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது தாம்பரத்தில் துவக்கப்பட்டது. அப்போது, சொந்த கட்டடம் இல்லாததால், வாடகை கட்டடத்தில் பள்ளி செயல்படத்துவங்கியது.பத்து ஆண்டுகள் தாம்பரத்தில் செயல்பட்ட இந்த பள்ளி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தாம்பரத்தை அடுத்த முடிச்சூருக்கு மாற்றப்பட்டது.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில், 42 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதில், பெரும்பாலானோர் இங்கேயே தங்கியுள்ளனர்.தற்போது, ஏழு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பல ஆண்டுகளாக, சிறிய வாடகை கட்டடத்தில் பள்ளி இயங்கி வருவதால், போதுமான வகுப்பறைகள் இன்றி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தூங்குவதற்கும் வசதி இல்லை; விளையாட்டு மைதானம் இல்லாததால், மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.இதனால், ஊராட்சிக்கு சொந்தமான மைதானத்திற்கு விளையாட அழைத்து செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில் துவக்கப்பட்டு, போதிய வசதியின்றி இயங்கி வரும் இப்பள்ளிக்கு, சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத கோரிக்கையாக உள்ளது.இந்நிலையில், இப்பள்ளிக்கு சொந்த கட்டடம் கட்ட, படப்பையில் இரண்டு ஏக்கர் நிலத்தை, ஊராட்சி நிர்வாகம் ஒதுக்கி கொடுத்தது. அந்த இடத்தை, பள்ளியின் பெயருக்கு மாற்றிதர, காஞ்சிபுரம் கலெக்டர் கடிதம் எழுதியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வருவாய்த் துறை ஆய்வாளரும் தகுந்த பதில் கூறுவதில்லை.தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமைந்துள்ள நிலையில், எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில் துவக்கப்பட்ட இப்பள்ளிக்கு, சொந்த கட்டடம் கட்டி தர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us