பாக் ஜலசந்தியில் சூறாவளி காற்று ஆறாவது நாளாக மீன்பிடிக்க தடை
பாக் ஜலசந்தியில் சூறாவளி காற்று ஆறாவது நாளாக மீன்பிடிக்க தடை
பாக் ஜலசந்தியில் சூறாவளி காற்று ஆறாவது நாளாக மீன்பிடிக்க தடை
ADDED : செப் 04, 2011 12:17 AM

ராமேஸ்வரம்: பாக் ஜலசந்தி கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால், மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றுடன் ஆறாவது நாளாக, ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. பாக் ஜலசந்தி கடல் பகுதியில், பருவ நிலை மாற்றத்தால், ஒரு வாரத்திற்கு முன்பு துவங்கிய காற்று, பகலில் லேசாகவும், இரவில் சூறாவளி போன்றும் வீசுவதால், ஆழ்கடல் கொந்தளிப்பாகவே உள்ளது. நீரோட்டமும் வேகமாக உள்ளதால், பாதுகாப்பு காரணமாக கடலுக்கு செல்வதில், மீனவர்கள் அக்கறை காட்டவில்லை. நேற்று, மணிக்கு 45 முதல் 60 கி.மீ., வேகத்தில் காற்று வீசுவதாக தகவல் வந்ததால், மீனவர்கள் கடலுக்கு செல்ல, மீன்துறை அதிகாரிகள் தடை விதித்தனர். ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி, வடகாடு, தங்கச்சிமடம் பகுதி மீனவர்கள், நேற்றுடன் ஆறாவது நாளாக, மீன்பிடிக்க செல்லவில்லை. மண்டபம் மீன் வியாபாரி சந்திரன் கூறுகையில், 'மீன்பிடிக்க தடையால், கிலோ 150க்கு விற்ற விள, நகரை மீன்கள், 200 ரூபாய்க்கும், 200க்கு விற்ற மாவுலா மீன் 250க்கும், 100க்கு விற்ற ஊடக மீன் 200க்கும், 150க்கு விற்ற நண்டு 200க்கும், 120க்கு விற்ற கிளைங்கான் 170க்கும் விற்கப்படுகின்றன' என்றார்.


