Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தமிழக பயங்கரவாதிகள் 11 பேர் பதுங்கியிருப்பது எங்கே? : உஷாராகிறது போலீஸ்

தமிழக பயங்கரவாதிகள் 11 பேர் பதுங்கியிருப்பது எங்கே? : உஷாராகிறது போலீஸ்

தமிழக பயங்கரவாதிகள் 11 பேர் பதுங்கியிருப்பது எங்கே? : உஷாராகிறது போலீஸ்

தமிழக பயங்கரவாதிகள் 11 பேர் பதுங்கியிருப்பது எங்கே? : உஷாராகிறது போலீஸ்

ADDED : ஜூலை 24, 2011 02:06 AM


Google News

கோவை : தமிழகத்தில், கடந்த காலங்களில் நிகழ்ந்த பல்வேறு குண்டுவெடிப்புகள், மத ரீதியான கொலைகளில் தொடர்புடைய 11 பயங்கரவாதிகள், பல ஆண்டுகளாக போலீசிடம் பிடிபடாமல் தலைமறைவாக உள்ளனர்.

மும்பையில் சமீபத்தில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு மற்றும் மத்திய உள்துறையின் எச்சரிக்கை தொடர்ந்து, தலைமறைவாக இருக்கும் தமிழக பயங்கரவாதிகளை தேடிக்கண்டுபிடிப்பது குறித்து, போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.நாட்டின் பொருளாதார தலைநகரான மும்பையில், கடந்த 13ம் தேதி தாதர், ஜாவேரி பஜார், ஒபேரா ஹவுஸ் பகுதிகளில் குண்டுவெடிப்பை நிகழ்த்திய பயங்கரவாதிகள், அப்பாவி மக்கள் 20 பேரை கொன்றனர். மும்பை மீதான தொடர் தாக்குதல்களை தடுக்க முடியாமல் தடுமாறும் மத்திய உள்துறை, பிற மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பலப்படுத்துமாறும், பயங்கரவாத வழக்குகளில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக கைது செய்யுமாறும் மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது.



இதுகுறித்த உஷார் தகவல்கள் தமிழக போலீசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளில் அவ்வப்போது நிகழ்ந்த பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடைய 11 பயங்கரவாதிகள் போலீசாரிடம் பிடிபடாமல் இன்றுவரை தலைமறைவாகவே உள்ளனர். இவர்களில் சிலர் மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், öளிநாடுகளுக்கும் தப்பியோடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நபர்கள் மீண்டும் ஒருங்கிணைந்தோ அல்லது சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் தூண்டுதலின் பேரிலோ தமிழகத்தில் நாசவேலையில் ஈடுபடும் அபாயமிருப்பதாக புலனாய்வு ஏஜன்சிகள் ஏற்கனவே எச்சரித்துள்ளன. இதனால், இவர்களை எப்படியாவது கைது செய்தாகவேண்டிய நிர்பந்தத்தில் தமிழக போலீசார் உள்ளனர்.தலைமறைவு பயங்கரவாதிகளை பற்றிய விபரம்:முஜிபுர் ரகுமான்: கோவை, போத்தனூர், நூராபாத், ஷேக் முகைதீன் சாகிப் வீதியைச் சேர்ந்த இவன், கோவை, பெரியகடைவீதி போலீஸ் எல்லைக்குள் கடந்த 1991ல் நடந்த மத ரீதியான கொலை வழக்கிலும், 1997ல் உடுமலையில் நகராட்சி வணிக வளாகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பிலும், 1998 பிப்.,14ல் கோவை நகரில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பிலும் தொடர்புடையவன்.



இவன் மீது கொலை, வெடிமருந்து சட்டப்பிரிவுகளில் கோவை மற்றும் உடுமலை போலீசில் ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவனை பற்றி தகவல் அளிப்போருக்கு இரண்டு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படுமென ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது.முஸ்டாக் அகமது: வேலூர் மாவட்டம், வாணியம்பாடி, எம்.பி., வீதியைச் சேர்ந்த இவன், தடை செய்யப்பட்ட 'அல்-உம்மா' அமைப்பின் தீவிர உறுப்பினர். கடந்த 1992ல் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி ஸ்ரீதரை சென்னையில் கொலை செய்ய முயன்றது, 1993ல் சென்னை, சேத்துப்பட்டு, ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகத்தில் சக்தி வாய்ந்த குண்டுவைத்து 11 பேரை கொலை செய்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவன். கடந்த 1992 முதல் தலைமறைவாக இருக்கும் இவனது தலைக்கு தமிழக அரசு இரண்டு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்தும், போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.சாதிக் (எ) டெய்லர் ராஜா: கோவை, தெற்கு உக்கடம், லால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த இவன், 'அல் - உம்மா' இயக்கத்தின் முக்கிய நபர்.



கடந்த 1996ல் கோவை மத்திய சிறை வளாகத்திலுள்ள டி.ஐ.ஜி., அலுவலகத்துக்குள் கூட்டாளிகளுடன் நுழைந்து சிறை டி.ஐ.ஜி.,யை கொல்ல முயன்றான். தடுக்க முயன்ற சிறைக்காவலர் பூபாலன் என்பவர் வெட்டி கொல்லப்பட்டார். அடுத்து, 1997ல் மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் ஜெயப்பிரகாஷ் கொல்லப்பட்டார். இவ்விரு வழக்குகளிலும் டெய்லர் ராஜாவை போலீசார் தேடிவந்தனர். எனினும் பிடிபடவில்லை. இந்நிலையில், கடந்த 1998ல் கோவை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி.,- எஸ்.ஐ.டி., போலீசார், டெய்லர் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர். பல இடங்களிலும் தேடியும் தகவல் இல்லாததால், இவனது தலைக்கு தமிழக அரசு இரண்டு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்தது.



அபுபக்கர் சிக்திக்: நாகபட்டினம், நாகூரைச் சேர்ந்த இவர், 'அல் - உம்மா' பயங்கரவாத அமைப்பின் தீவிர உறுப்பினர். கடந்த 1995ல் நாகபட்டினம் மாவட்ட இந்து முன்னணி அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், திருச்சி மாவட்ட பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் ஜீவரத்தினம் ஆகியோருக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி கொல்ல முயன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர். விருதுநகரைச் சேர்ந்த அகமது அம்மான், கோவை நகரைச் சேர்ந்த ஜாகிர்உசேன் ஆகியோருடன் வெடிகுண்டு தயாரித்து, கொச்சின் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைத்து தகர்த்தவர். கோவை குண்டுவெடிப்பு வழக்கிலும் தொடர்புடையவர். போலீசார் பல இடங்களில் தேடியும் அபபூக்கர் சித்திக் பிடிபடாததால், இவரது தலைக்கு தமிழக அரசு இரண்டு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்தது. மும்பைக்கு தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.



அஷ்ரப் அலி: கோவை, குனியமுத்தூர், திருமூர்த்தி நகரைச் சேர்ந்த இவர், கேரளாவில் செயல்படும் ரகசிய பயங்கரவாத அமைப்பின் தீவிர உறுப்பினர். கடந்த 2002ல், கோவை, ஆர்.எஸ்.,புரத்தைச் சேர்ந்த சுல்தான் மீரான் என்பவர் இந்து அமைப்பினரால் வெட்டிக்கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்கும் வகையில் கடந்த 2002, மார்ச் 28ல், கோவை மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., செயலாளர் முருகேசன் பி.கே.,புதூரில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் அஷ்ரப் அலி, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.அயூப்(எ) அஷ்ரப் அலி: கோவை, செல்வபுரம், கல்லாமேடு பகுதியைச் சேர்ந்த இவர், முன்பு 'இஸ்லாமிக் டிபன்ஸ் போர்ஸ்' என்ற இயக்கத்திலும், பின்னர் 'அல் -உம்மா' இயக்கத்திலும் அங்கம் வகித்தவர்.



கடந்த 1997ல், பாண்டியன், சேரன் மற்றும் ஆலப்புழா எக்ஸ்பிரல் ரயில்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்வங்களில் தொடர்பு உள்ளவன். இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 10 பயணிகள் பலியாகினர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான அயூப், கடந்த 14 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளார். இவர் மீது ஈரோடு, திருச்சி, திருச்சூர் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன்கள், சென்னை கே.கே.நகர், வேப்பேரி, புளியந்தோப்பு, ராயப்பேட்டை, அண்ணாசாலை போலீஸ் ஸ்டேஷன்களில் வெடிகுண்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இவனது தலைக்கும் தமிழக அரசு இரண்டு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்தும், தகவல் இல்லை.இப்ராகிம்: கோவை, குனியமுத்தூர், திருமூர்த்தி நகரைச் சேர்ந்த இவர், கடந்த 2002, மார்ச் 28ல், கோவை மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., செயலாளர் முருகேசன் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி. போத்தனூர் போலீசாரால் 'தேடப்படும் குற்றவாளியாக' அறிவிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளாகிறது.



குஞ்சுமுகமது(எ) கனி: கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம், ராமபுரம், பனங்கங்கரா பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 1998, பிப்., 14ல் கோவை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவன்.முகமது அலி (எ) யூனுஸ்: நெல்லை மாவட்டம், மேலப்பாளையம், இப்ராகிம் தாய்க்கா வீதியைச் சேர்ந்த இவர், கடந்த 1999ல் சென்னை, சிறைத்துறை ஐ.ஜி., அலுவலக குண்டுவெடிப்பில் தொடர்புடையவர். சென்னை எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷன்களிலும் இவர் மீது பல்வேறு வெடிகுண்டு வழக்குகள் பதிவாகியுள்ளன.நூகு(எ) ரஷீத்: கேரளா மாநிலம், கோழிக்கோடு, திருவன்னு பன்னியங்கரா பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 1998, பிப்.,14ல் கோவை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவன். பல ஆண்டுகளாக தேடியும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.ரசூல் மைதீன்: நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த இவர், மேலப்பாளையத்தில் கடந்த 1997ல் நடந்த மத ரீதியான இரு கொலைகளில் தொடர்புடையவர். இந்நபர்களை தேடிக்கண்டுபிடித்து கைது செய்வது தொடர்பாக, தமிழக போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us