பத்மநாப சுவாமி கோவிலில் பொக்கிஷங்கள் மதிப்பிடும் பணி ஒரு வாரத்திற்குப் பின் நடக்கும்
பத்மநாப சுவாமி கோவிலில் பொக்கிஷங்கள் மதிப்பிடும் பணி ஒரு வாரத்திற்குப் பின் நடக்கும்
பத்மநாப சுவாமி கோவிலில் பொக்கிஷங்கள் மதிப்பிடும் பணி ஒரு வாரத்திற்குப் பின் நடக்கும்

திருவனந்தபுரம் : பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பொக்கிஷங்கள் குறித்து மதிப்பீடு செய்ய, சுப்ரீம் கோர்ட் நியமித்த கமிட்டி, கோவில் பாதாள அறைகளில், மூன்று அறைகளைத் திறந்து பார்த்து ஆய்வு நடத்தியது.
இதையடுத்து, ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் அங்கு பாதுகாக்கப்பட்டிருக்கலாம் என தெரிந்தது. அங்குள்ள ஆறு அறைகளில், ஐந்து அறைகளை மட்டுமே அக்குழு திறந்து பார்த்துள்ளது. ஆறாவது அறை (பி அறை)யை அக்குழு திறக்கவில்லை. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில், ஆறாவது அறையை மறு உத்தரவு வரும் வரை திறக்கக் கூடாது என அறிவித்தது.
இந்நிலையில், அங்குள்ள பொக்கிஷங்களை நேரில் ஆய்வு செய்து மதிப்பீடு செய்ய, ஐந்து பேர் கொண்ட கமிட்டியை, சுப்ரீம் கோர்ட் நியமித்தது. இக்குழுவுக்கு தேசிய அருங்காட்சியக மைய துணைவேந்தர் டாக்டர் சி.வி. ஆனந்தபோஸ் தலைவராகவும், உறுப்பினர்களாக தொல்லியல் துறை பாதுகாப்புப் பிரிவு தலைவர் வி.எம்.நாயர், பத்மநாப சுவாமி கோவில் செயல் அலுவலர் வி.கே. அரிக்குமார், இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை பிரதிநிதி பி.வி.ராஜு, ரிசர்வ் வங்கி பிரதிநிதி விகாஸ் சர்மா ஆகியோர் உள்ளனர்.
இக்குழுவினர், நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு, கோவிலில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில், சுப்ரீம் கோர்ட் நியமித்த குழுவினரும், நீதிபதி எம்.என்.கிருஷ்ணன், மாநில கூடுதல் தலைமை செயலர் கே.ஜெயக்குமார், உத்ராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவின் பிரதிநிதி ஆதித்ய வர்மா, பாதாள அறைகளின் சாவிகளை பாதுகாத்து வரும் ரவி வர்மா ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின், கோவிலுக்குள் சென்ற அக்குழுவினர், பாதாள அறைகளை நேரில் பார்வையிட்டனர். அவர்களுடன் நவீன தொழில்நுட்பக் கருவிகள், ஆயுதங்கள் கொண்ட நபர்களும் உதவிக்குச் சென்றனர். அங்கு அக்குழுவினர், ஏ,சி, டி ஆகிய மூன்று அறைகளை மட்டும் திறந்து பார்த்தனர். ஐந்து அறைகளிலும் பாதுகாக்கப்படும் பொக்கிஷங்கள் குறித்து மதிப்பீடு செய்யும் பணி ஒரு வார காலத்திற்குப் பின், அதாவது 8 அல்லது 9ம் தேதியே நடைபெறும் என தெரிகிறது.
இப்பணிகளின் போது வீடியோ எடுப்பது மற்றும் திறக்காமல் உள்ள பி அறையை திறப்பது போன்றவற்றின் இறுதி தீர்மானத்தை, சுப்ரீம் கோர்ட் தான் எடுக்க வேண்டும். மேலும், பாதாள அறைகளில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்வதற்கு முன், தேவ பிரசன்னம் (சோழி போட்டு ஜோதிடம் கணித்தல்) பார்த்தும் மற்றும் தந்திரி(தலைமை அர்ச்சகர்)களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பிறகே துவங்க வேண்டும் என, ராஜகுடும்பத்தினர், சுப்ரீம் கோர்ட் நியமித்த குழுவினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
அக்கோரிக்கைகள் குறித்தும் சுப்ரீம் கோர்ட் தான் முடிவு செய்ய வேண்டும். 'தங்களிடம் சுப்ரீம் கோர்ட் ஒப்படைத்த பணிகள் குறித்து நடவடிக்கை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் இப்பட்டியல் படியே எங்களது செயல்பாடுகள் துவங்கி நடைபெறும். சுப்ரீம் கோர்ட் நியமித்த உறுப்பினர்களுக்கு தனித்தனி பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன' என, கமிட்டி தலைவர் ஆனந்தபோஸ் தெரிவித்தார்.