ADDED : செப் 16, 2011 02:23 AM
மஞ்சூர்:மஞ்சூர்-கோவை சாலையில் யானைகள் சுற்றி திரிவதால் டிரைவர்கள்
அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூரிலிருந்து கெத்தை, முள்ளி,
காரமடை வழியாக கோவைக்கு அரசு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இதில், கெத்தையிலிருந்து முள்ளி வரை யானைகள் நடமாட்டம் அதிகளவில்
தென்படுகிறது. யானைகள் சாலை ஓரத்திலுள்ள மரங்களை சாய்த்து வருகின்றன.
இதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்தாலும் யானைகளை கட்டுப்படுத்தாத
நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் இரவு 8 மணிக்கு இச்சாலையில்
வந்துகொண்டிருந்த அரசு பஸ்சை யானை கூட்டம் 4 மணி நேரம் சிறைப்பிடித்ததால்
பயணிகளிடையே பீதி ஏற்பட்டது. 'இந்த சாலையில் வாகன ஓட்டிகள் மிகுந்த
எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்,' என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


